Tuesday, 15 March 2011

நங்கை





                நகரின் மிக பிரபலமான பொறியியல் கல்லூரி அதற்கே உரிய சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பாடவேளை  ஆரம்பமானதால் அலுவலக கட்டிடம் சற்று அமைதியாகவே இருந்தது. தேர்ந்த மடிப்புடன் இளம்நீல நிற காட்டன் புடவையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தாள் தன்யா. அந்த கல்லூரியின் ஆங்கில விரிவுரையாளருக்கான நேர்காணல் நடைபெற்று கொண்டிருந்தது.

            அலுவலகத்தினுள் வந்தவர்களும், நேர்காணலுக்கு வந்தவர்களும் தன்யாவை அடிக்கடி கேள்வியாய் பார்த்து கொண்டனர். பல வருடங்களாய் பழகிப் போன இந்த பார்வைகள் அவளை பாதிக்கவில்லை. தன்னுடைய முறைக்காக காத்திருந்தாள். அலுவலக உதவியாளர் அவள் பெயர் சொல்லி சிறு முறுவலுடன் எழுந்து சென்றாள்.

"May I come in Sir", அவளின் கணீர் குரல் ஆங்கில துறை தலைமை பேராசிரியர் ராஜசேகரை சற்று திடுக்கிட்டு நிமிர வைத்தது.

"எஸ் தன்யா?", என்றார் புருவங்கள் கேள்வியாய் நெறிய.

அவளை அமர சொல்லிவிட்டு அவளுடைய கல்வி சான்றிதழ்களை வாங்கி பார்த்தவர் வழக்கமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அவளுடைய பதில்களும், கல்வி தகுதியும் அந்த வேலைக்கு தன்யா மிகப் பொறுத்தமானவள் என்பதை உறுதி செய்தது.

நேர்காணலுக்கான முடிவை நாங்கள் தபால் மூலம் அனுப்புகிறோம்", என்றார் அவர்.

சிறு தயக்கத்தோடு, “Sorry Sir, நீங்க முடிவை உடனே சொன்னால் நான் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை. நான் ஏன் கேட்கிறேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும் ", என்றாள் தெளிவாக.

சிறு தயக்கத்தோடு அவளை வெளியே காத்திருக்க சொன்னவர் நேரே கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றார். வேலை இல்லை என்று சொல்லாமல் காத்திருக்க சொன்னது அவளுக்கு எதிர்பார்ப்பை தந்தது. 30 நிமிட காத்திருப்பிற்க்கு பிறகு அவள் அழைக்கப்பட்டாள்.

கல்லூரி முதல்வர் தமிழரசுவிற்கு எதிரே இருந்த இருக்கையில் தன்யா அமர்ந்தாள். முதல்வர் மற்றும் பேராசிரியர் இருவர் முகமும், ஒரே மாதிரியான உணர்வுகளையே காட்டியது. கண நேர மௌனதிற்கு பின் தமிழரசு பேச ஆரம்பித்தார்.

"நான் என்ன சொல்ல போறேன் என்பதை ஓரளவு யூகித்து இருப்பீங்க.உங்களுடைய தகுதி, திறமை இதிலே எல்லாம் குறை 
சொல்ல முடியாது. ஆனா இது வரை எங்க கல்லூரியிலே...", அவர் முடிக்கும் முன்பு இடை மரித்த தன்யா , "புரியுது sir என்ன மாதிரியான திருநங்கை இது வரை உங்க கல்லூரி வேலைக்கு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு கல்வி தகுதி, திறமை எல்லாம் இருக்குன்னு நீங்களே சொல்றீங்க. அப்போ consider பண்ணலாமே", என்றாள் கனிவான குரலில்.


                                                                               ---- நங்கை தொடர்வாள்

Tuesday, 8 March 2011

இவளே பெண்



புதிராக வருவாள் - இவள்
புயலையும் அடக்கிடுவாள் அன்பினால்

தென்றலாய் வருவாள் - இவள்
பூக்களுடன் பேசிடுவாள் புன்னகையால்

விருட்சமாய் எழுவாள் - இவள்
வெற்றிக்கு வித்திடுவாள் நுண்ணறிவால்

நெருப்பாய் கொதித்திடுவாள் - இவள்
வியத்தகு மாற்றம் செய்வாள் சிறுசெய்கையால்

பனியாய் குளிர்ந்திடுவாள் - இவள்
பண்பினை வளர்த்திடுவாள் கண்டிப்பினால்

அஷ்ட அவதாரங்கள் எடுப்பாள் - இவள்
இருந்தும் சோர்வடையாள்

இவளே பெண்