Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, 8 March 2011

இவளே பெண்



புதிராக வருவாள் - இவள்
புயலையும் அடக்கிடுவாள் அன்பினால்

தென்றலாய் வருவாள் - இவள்
பூக்களுடன் பேசிடுவாள் புன்னகையால்

விருட்சமாய் எழுவாள் - இவள்
வெற்றிக்கு வித்திடுவாள் நுண்ணறிவால்

நெருப்பாய் கொதித்திடுவாள் - இவள்
வியத்தகு மாற்றம் செய்வாள் சிறுசெய்கையால்

பனியாய் குளிர்ந்திடுவாள் - இவள்
பண்பினை வளர்த்திடுவாள் கண்டிப்பினால்

அஷ்ட அவதாரங்கள் எடுப்பாள் - இவள்
இருந்தும் சோர்வடையாள்

இவளே பெண்

Friday, 19 November 2010

முகவரி

                                              

சென்றாய் தானாய் சென்றாய் ,
விருப்பம் இருந்தும் பறந்து சென்றாய்

நின்றாய் நேரில் நின்றாய்
தொட்டால் பனியாய் கலைந்து மறைந்தாய்

கனவுகள் காற்றை போன்றே கையில் சிக்க மறுக்கிறது
நினைவுகள் தீயை போன்றே உள்ளம் வரை சுடுகின்றது

நேற்று வரை நம்பிய நொடிகள் கண்முன்னே மறைகிறது
நாளை என்ற நம்பிக்கை இங்கே தூரம் சென்று சிரிக்கிறது

கண் முன்னே தோன்றிய இன்பம் என் பேரை மாற்றி சென்றதும் ஏனோ?
சகுனங்கள் கூட என்னை சகுனத் தடையாய் பார்த்திடுமோ?

விண்ணின் அழகைக் காண மண்ணை விட்டு சென்றதும் ஏனோ?
நீ இன்றி சொந்தங்கள் கூட முகங்கள் மாற்றி சென்றிடுமோ?

தொலைந்ததை தேடித் தோற்றேன்,
புதியதை தேடவும் பயந்தேன்

அடையாளங்கள் மாற்றவும் வெறுத்தேன்,
தானாய் மாறும் என்பதை மறந்தேன்

அந்நியர் பலரின் பார்வைகள் துளைக்க
துணையற்ற வேதனை உணர்ந்தேன்

பாதை மறந்து பாதியில் நின்றேன்
உறவாய் புதிய பாதையை கேட்டேன்

என் நெஞ்சமும் உனக்கு புரியும்
உன் நேசமும் என் மனம் அறியும்

உண்மை நிலையை நீயே அறிவாய்
புதிய முகவரி தேடித் தருவாய்

Sunday, 7 November 2010

தேவதைத் திருடன்



நாம் இருவர் மட்டும் அறிந்த உனக்கான என் கவிதைகள்
காதல் உலகில் பிரசுரமாகி விட்டதாம் ,
"
தேவதைத் திருடன்" என்ற பெயரில்
இன்று காதல் உலகின் மொழியாகிப் போனது என் கவிதைகள் 

நீ என்ன காதலை கண்டு பிடித்தவனா?
ரதி கூட பொறாமைகொள்கிறாள் என்னை பார்த்து

சாதாரண மனுஷியாகத்தானடா திறிந்தேன்?
ரசித்து ரசித்தே என்னை தேவதையாக்கி  விட்டாய்
மமதை தலைக்கேறி விடுகிறது இந்த
தேவதைத் திருடனுடன் நடக்கும் பொழுது

Monday, 11 October 2010

வேண்டும் இந்த அவஸ்தைகள்


என்றும் தாண்டி செல்லும் தெருவோர பிள்ளையாருக்கு
லஞ்சமாய் மூன்று தோப்புகரணம் போட்டு

பரீட்சை அட்டையில் எம்மதமும் சம்மதமாய்
அனைத்து கடவுள்களின் படங்களையும்  ஒட்டி

முன்னிருக்கை மாணவன் வேகமாக பதில் எழுத
அதை பார்த்து பதில் மறந்த நிமிடம் கடந்து

காற்றாடி இருந்தும் வேர்த்து கொட்டி
விடைத்தாளை நனைத்து

கடைசி நேரத்தில் கோணல் மாணலாய்
நூல் சேர்த்து கட்டி  விடைத்தாளை வழியனுப்பி
பெருமூச்சு விட்டு

இவை அனைத்தும் வாழ்வில் மீண்டும்
வேண்டுமென ஏங்கும் அவஸ்தைகள்

 

Wednesday, 22 September 2010

மௌன மொழி


என் மௌனத்தின் வார்த்தைகளை
உன் புன்முறுவலில் வாசித்த நேரம்,
உன் கண்கள் என் நாணத்தை கண்டு கொண்டதோ?

நம் மௌனம் வெல்லும் சந்திப்புகள்
நீண்டு கொண்டே செல்கின்றன
இருந்தும் ஆவல் கொண்டேன் மௌன மொழி கற்பதற்கு

வார்த்தைகள் ஆயிரம் உதிர்த்தும்
உன் ஒற்றை பார்வையின் காதலை
அது சொல்லாததேன்?

பேச தெரிந்தும் ஊமையான இதழ்களுக்கு
மௌன மொழியின் மீது உள்ள காதலை யார் அறிவார்?

இந்த மௌன உலகத்திற்குள் சஞ்சரிக்கும் முன்
தெரிந்திருக்கவில்லை வெளியே செல்ல முடியாதென்று
தெரிந்த பின் கவலை கொள்ளவில்லை
வெளிய செல்வதற்கு

Friday, 10 September 2010

ஊடல்

சில மணி நேரத்திற்குள் புயலும், தென்றலும்                                      மாற்றி மாற்றி
வீச முடியுமா ஒரு இடத்தில
இல்லை என்றால் நுழைந்து பார் என் இதயத்தினுள்
எல்லா வானிலை மாற்றமும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது
என்னுள் உன்னால்
        



                                                                                         

அதெப்படி உன்னை அடிக்கும் பொழுதுகளில் மட்டும்
மென்மை கூடி விடுகிறது என் கைகளில்?
வலிக்கவே இல்லை என்று அடம் செய்கிறாய் 
 

என்ன மாயம் செய்தாய் உன்னை கண்டால்
என் கோபங்கள் கூட கவிதைகளாக மாறி
என்னை இம்சிக்கிறது                    

                                                        

உன் காதுகளை கடிந்து கொள்கிறேன்
நீ தூங்கும் பொழுதுகளில் தேவையற்ற சப்தங்களை கேட்டு உன்னை எழுப்பி விடுகிறதே

Thursday, 26 August 2010

ஏன்




என் வாழ்வினில் சிறப்பானதேன்?
உனை நெஞ்சம் ரசித்த நொடி

என்  நெஞ்சமும்  மறக்காததேன் 
நம் முதல் சந்திப்பினை

என் செவிகளும்  சேமித்ததேன்?  
 உன் முதல் வார்த்தைகளை

என் கால்களும் கெஞ்சுவதேன்
 உன் வீடு நோக்கி செல்ல

என் நாணமும் மிஞ்சுவதேன் 
உன் விழிகளை பார்க்கையிலே

Thursday, 5 August 2010

மாற்றப்படாத நியதிகள்



மான் கொன்று,
மரம் துளைத்து,
புலி மீது வில் பாய செய்ய
வித்தகன் இன்று இல்லை

ஆனால் வள்ளுவனின் வாசுகியாய் இன்றைய பெண்ணும்
இருக்க வேண்டுமென வரையறை செய்வார்

கல் தூக்கி தீரம் காட்ட,
ராமன் போல் ஒழுக்கம் கொள்ள,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு பெண்ணும் நிலம் பார்த்து பேச,
நிலமகள் நோகாமல் நடக்க வேண்டுமென்பார்

நீதியோடு வரி கட்ட,
நியாயதோடு ஓட்டு போட,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு ஆளுமையும் மனுநீதிசோழனின்
காலத்திற்கு நிகராய் இருக்க வேண்டுமென்பார்

இவை யாவும்  மாற்றப்படாத நியதிகள் 
மற்றும் மாற்றமுடியா நியதிகள்

Wednesday, 4 August 2010

துவக்கமும் முடிவும்

அன்பின் அழகே
சர்வமும் அழகு உன் கருவிழிக்குள்ளே

கருவிழி சிறையினுள் சிக்கி கொண்டேன்
மீள வழி இருந்தும் விருப்பம் இல்லை

இல்லை என் நினைவில் வேறொன்றும்
உனை பற்றி நினைக்க துவங்கினால்

துவங்குவேன் ஒவ்வொரு பொழுதையும் உன்
மலர்ந்த புன்னகை முகம் பார்த்து

பார்த்து பார்த்து சேகரித்து கொண்டேன்
உன் வார்த்தைகளில் இருந்த அன்பை

Thursday, 29 July 2010

மன்னித்து விடு



என் வகுப்பு தோழனே,

கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,

என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,

என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,

தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,

வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,

என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,

நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,

பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,

எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,

சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,

'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,

எப்படி சொல்வது உன்னிடம்?

எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,

உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,

என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,

எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,

எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,

என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,

வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?

பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?

உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்

எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?

என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது

மன்னித்து விடு என்னை?

Tuesday, 20 July 2010

நம் நட்பு




சரியென்று சொல்ல முடியவில்லை,
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

வார்த்தைகள் பரிமாற்றம் எண்ணங்களின் பரிமாற்றமாய்
உரு மாறிய பின் உணர்ந்தேன் நமது நெருங்கிய நட்பை

மணித்துளிகள் கரைவது அறியாமல் பேசிய வார்த்தைகளில்
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

பிரிந்து விடும் என்று தெரிந்தும் உருவாக்கிய நட்பை
சரியென்று சொல்ல முடியவில்லை,
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

இறுதியில்  உணர்ந்தேன் அந்த உறுத்தல்
நம்மை கடந்து சென்றவர்களின் பார்வையினால் வந்தது என்று

Tuesday, 13 July 2010

அழகிய சிறை



எத்தனை முறை பார்த்தாலும் என் கண்ணாடி என்னை
அழகாய் காட்டவில்லையடா உன் கருவிழி போல.

உன் கருவிழிக்குள் சிக்கித் தவிக்கும்
என் சுந்தர வதனத்தை காணவே தினம் உன் விழி நோக்குகிறேன்

அப்படி என்ன அதிசயமான பாதரசம் பூசி உள்ளாய்
உன் விழிச் சிறைக்கு

எத்தனை முறை நீ விடுவித்தாலும் தானாக வந்து அடைப்பட்டு
கொள்கிறேன் அந்த அழகிய சிறைக்குள்

Wednesday, 7 July 2010

பௌர்ணமி நிலவே




என் வளர்பிறை நிலவே
இலக்கணம் பார்க்கவில்லை உன் மனதின் மழலை பேச்சிற்கு

உனை பார்க்க துடிக்கிறேன்
என் நாடித்துடிப்பை நானே எண்ணி பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து

மயக்கமும் , சோர்வும் தான் என்றாலும் பொறுத்து கொண்டேன்
அது உன்னால் ஏற்பட்டது என்பதனால்

எத்தனை முறை ஒவ்வாமை ஏற்பட்டாலும் உண்ண மறுக்கவில்லை,
உன் சிறு உடல் தழைப்பதற்காக

இன்னிசைக்கே அடிமை ஆகாத என் மனம்
உன் அதிவேக இதய துடிப்பை மட்டும் மண்டியிட்டு கேட்கிறது

உன் அழகை கண்டு பெருமைப்பபட்டு கொண்டேன் - உனை
அதிநவீன அறிவியல் சாதன உதவியுடன் அரை குறையாய் பார்த்த பொழுதுகளில்

பல இரவுகளில் தூக்கம் தவிர்த்தேன் - நீ
தூக்கம் இன்றி எனை உதைத்து விளையாடுவதை ரசிப்பபதற்காக

மௌன விரதம் இருந்தேன் என் வளர்பிறை வயிற்றினுள்
நீ அசைவற்று உறங்கிய நேரங்களில் எல்லாம்

தவம் இருக்கிறேன் என் நிலவு தன் முழு உருவம்
காட்ட போகும் அந்த பௌர்ணமி நாளுக்காக

Friday, 2 July 2010

யுத்த பூமி



அவர்களின் கண்களில் பொங்கிய பகைமை
கானல் நீரினால் பொங்கிய வெள்ளம் என்பதை உணர மறுப்பதேன்?

முதன் முதலில் பார்த்து கொண்டாலும்
அவர்கள் பகைவர்கள் தானாம்

நான்கடி தொலைவில் நின்றாலும் அவர்களின்
தேசங்கள் வேறாகி போன வினோதமென்ன?

என்று ஆரம்பமானது இந்த பகைமை?
ஆதாம், ஏவாலின் சந்ததிகள் வளர ஆரம்பித்ததில் இருந்தோ?

அவர்களின் ஆயுதங்கள் எதிரே உள்ளவனின்
இரத்தத்தின் நிறத்தை அறியும் ஆவலில் முன் வந்து நிற்கிறதோ?

உடைகளின் நிறங்களில்தான் அவர்களுக்குள் வேற்றுமை
கொலை வெறி கொண்ட கண்களிலோ, அவை பார்க்கும் குறியிலோ அல்ல

இத்தனை பகைமை கொண்ட இவர்கள் யார் தெரியுமா?
ஏதோ இரு நாடுகளின் எல்லை காவலர்கள்!

Thursday, 24 June 2010

அறிந்தும் அறியாமலும்



எனை அறியாமல் திரும்பி பார்க்கிறேன்
உன் பெயர் கேட்ட மறு நொடியில்

எனை அறியாமல் உன் பார்வையுடன் பரிமாற்றம் நடக்கிறது
நீ என்னை கடக்கும் அந்த நொடிகளில்

எனை அறியாமல் ரசிக்கிறேன் நீ பேசி விட்டு
பதிலுக்காக காத்திருக்கு அந்த கண நேர மௌனத்தை

எனை அறியாமல் பார்த்து கொண்டிருக்கிறேன்
நீ முகம் பார்த்துவிட்டு சென்ற என் வீட்டு கண்ணாடியை

எனை அறியாமல் தொட்டு பார்த்து கொள்கிறேன்
நீ தொட்டு விட்டு போன என் தோட்டத்து செடியின் இலைகளை

எனை அறியாமல் சிரித்து விடுகிறேன்
நீ முணுமுணுத்த வரிகளை வானொலியில் கேட்கும் போது

எனை அறியாமலே மனனம் செய்து கொள்கிறேன்
நமது நீண்ட உரையாடல்களை

எனை அறிந்தே என் விருப்பத்தை சொல்கிறேன்
நீ கனவுகளில் வரும் பொழுது மட்டும்

எனை அறிந்தே காத்திருக்கிறேன்
நீ காதல் சொல்லும் தருணத்திற்காக

Tuesday, 22 June 2010

மயக்கம்

உன் பிஞ்சு விரல்களின் தொடுகையும்
சின்ன இதழ்களின் உளறலும்
உன் இதயத்துடிப்பை என்ன முடிந்த நெருக்கமும்
என்னை மயங்க செய்யுதடா
உன்னை தூங்க வைக்கும் பெருமுயற்சியில். 

Tuesday, 15 June 2010

முதல் கனாவே


வேப்பங்கொழுந்து ஒன்று பலாவின் சுவை தந்தது
உனை பார்த்த முதல் நிமிடம்

காற்றுடன் கதை பேசினேன், அதன் காதலை பற்றி கேட்கிறேன்
உனை சந்தித்த முதல் மாலையில்

உனை போல் பேசி பார்த்தேன், கண்ணாடியும் கேலி செய்தது
உனை பார்த்த முதல் தினத்தில்

உயரம் சரியோ என்று பலமுறை யோசித்தேன்
எனக்குள் நானே அளந்து கொண்டேனடா உனை

வாசலை தினம் பார்கிறேன் உன் வருகையை எதிர்பார்கிறேன்
என் விலாசம் அறிவாயோ என்பதை மறந்து

நம் கற்பனை சண்டைகளுக்கு வசனங்கள் எழுதி கொண்டேன்
காவியம் ஒன்றாய் அது மாறுமென தவம் இருக்கிறேன்

உன் ரசனை அறியவில்லை இருந்தும் வித விதமாய்
அலங்கரித்து கொண்டேன்

முல்லை மலரும் வேளையிலும் முள்ளாய் தைத்தது உன் நினைவு

நீ என்ன தொடுவானமா, தொட முயன்று தோற்று போனேன்

உன்னுடனான சம்பாஷனைகள் கனவாக தெரியவில்லை
உன்னுடனான வாழ்கைக்கு ஒத்திகையாக தெரிகிறது

கனவுதான் நீ என்று அறிந்தும் உனக்கான வருகையை எதிர்பார்கிறேன்
நீ அதிகாலை கனா என்பதனால்

வந்து விடு என் முதல் கனாவே
நிறைத்து விடு என் பகல் பொழுதுகளையும்

Wednesday, 2 June 2010

வண்ணம் மாறிய வரங்கள்






மனிதா! என்னை தெரிகிறதா!
பயிர்களின் தேவதை நான்
என்னிடம் இருந்த அனைத்து வரங்களையும் உனக்கு விதைகளாய் அளித்துவிட்டேன்

உன் நுண்ணறிவின் நுட்பத்தை என் பயிர் பிள்ளைகளில்
கலப்படத்தை புகுத்தியா அறிய வேண்டும்
விட்டு விடு என் செல்வங்களை
வண்ணம் மாறிய என் வரங்களை காண முடியவில்லையடா

இயல்பை தொலைத்த பயிர்கள் உன் சந்ததியின் உடலை கெடுக்கும்
என்பது உன் அறிவுக்கு எட்டவில்லை போலும்
என் வரங்கள் உன் சந்ததிக்கு சாபங்களாக மாறிக்கொண்டிருகின்றன
முடிந்தால் தடுத்து கொள்

Monday, 17 May 2010

தங்க மீன்


அதிகாலை நேர கனவில் தங்க மீனொன்று என்னை எழுப்பியது
அழகிய மீன் இளவரசியை பிடிக்க முயன்றேன்

புரிய முடியாத புன் சிரிப்புடன் என் மேல் வீசிச் சென்றாள்,

பட்டாம்பூச்சி தேடல்களின் தோல்வி நேரங்களை,

கண்ணாமூச்சி ஆட்டத்தின் கடைசி நிமிடங்களை,

வைக்கோல் போரின் மேல் ஏற முயன்று தவறி விழுந்த தடயங்களை,

வெயிலின் உக்கிரம் எதிர்த்த மிதிவண்டி பயணங்களை,

தங்க மகளை புரியாமல் நோக்கிய எனக்கு சிறு புன்னகையில் புரிய வைத்தாள்

தொடர்ச்சி இல்லா நினைவுகளின் ஊடே என்னுடன்
தொடர்ச்சியாய் பயணித்த என் குழந்தை மனதை

Thursday, 13 May 2010

கண்ணாமூச்சி ஆட்டம்


கண்ணாமூச்சி ஆட்டத்தில் உன்னிடம் நான் தோற்கிறேன்
ஒவ்வொரு முறையும் உன் கண்களில் தெரியும் உன் வெற்றி புன்னகைக்காக

உனக்கு தெறிந்த ஒரே இடம் போர்வை என்பதனால் நான் அதனையே தேர்வு செய்தேன்
நீ போர்வையை தூக்கி பார்த்து கை தட்டி சிரிக்கும் அழகை ரசிப்பதற்காகவே


உன் இடம் அறிந்தும் உன்னை கண்டு பிடிக்க முடியவில்லை என்று பொய் சொன்னேன்
கண்களில் மின்னல் சிரிப்புடன் நீ வெளிவருவதை பார்த்து ரசிப்பதற்காகவே

சலித்து போனாலும் உன்னுடன் விளையாடினேன்
நீ சலிக்காமல் விளையாடுவதை பார்பதற்காகவே

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle