Friday 26 November, 2010

வாய்ப்பு


"ஏய் பவித்ரா, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?", குழப்பமாய் கேட்டான் வர்ஷன்.

"
இல்லையே நான் நல்லாத்தான் இருக்கேன்", தெளிவாய் சொன்னாள் பவித்ரா.

"
இப்போ உனக்கு என்ன குறைன்னு, வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற?", என்றவனிடம்

"
ஒண்ணும் இல்லைங்க, நம்ம கிட்ட குறை ஏதும் இல்லையே நிறைய பணம்தான் இருக்கு, அப்புறம் என் வீணா கஷ்டப்படணும். அதுவும் இல்லாம நாம கனடா போக போறோம், அங்கேயே குடியுரிமை கூட கிடைச்சுடும், நல்லா நிறைய சம்பாதிக்கலாம்....", பவித்ரா சொல்லிக்கொண்டே  போக வர்ஷன் இடைமறித்தான்.

"நிறுத்துடி பணம் இருந்தா தாய்மை உணர்வு இல்லாம போய்டுமா?".

"பணம் குடுத்தா நமக்கு நல்லா ஆரோக்யமான குழந்தை பெற்றுத்தர வாடகை தாய் இருக்காங்க. அப்புறம் என்ன?",

"ஐயோ, நிறுத்து பவித்ரா. நம்ம குழந்தையை நீயே சுமந்து பெத்து, அதுக்கு எல்லாம் பார்த்து பார்த்து நாமலே செய்யறதுலதான் உண்மையான இன்பம் இருக்கு.", என்றான் வர்ஷன் கெஞ்சலாக.

"பணம் இருக்கறதால தான உங்க அம்மா , அப்பா ரெண்டு பேரையும் இங்க நல்லா வசதியான முதியோர் இல்லாமா பார்த்து விட்டுட்டு , நாம வெளிநாடு போலாம்னு சொல்றீங்க", என்றாள் பவித்ரா ஏளனப் புன்னகையுடன்.

"அவங்களை இங்க நல்லா பார்த்துப்பாங்க. அதுவும் இல்லாம அந்த நாட்டின் தட்பவெட்ப நிலை இவங்களுக்கு ஒத்துக்காதுமா. இதுக்காக கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறது அபத்தம் பவித்ரா.", என்றான் வர்ஷன் தன்  முடிவை நியாயப்படுத்தும் விதமாக.

"
அடுத்தவங்க, நல்லா பார்த்துப்பாங்கதான், ஆனா அவங்களோட அந்திம காலத்துல நாமலே இருந்து பார்த்துக்கற மாதிரி வராதுங்க. எப்படி நம்ம குழந்தையை நான் ஆரோக்யமா இருக்கும் போது, வாடகை தாய் மூலமா பெத்துக்கறது அபத்தமோ, அதே மாதிரி பெத்த பிள்ளைகள் இருக்கும் போது அவங்களை முதியோர் இல்லத்தில் விடறதும் அபத்தம்தான்.", என்றாள் பவித்ரா உறுதியுடன்.

அமைதியாக இருந்தவனிடம், " என்ன பதில் பேச முடியலையா?. இங்கயே நாம நல்லா வாழற அளவுக்கு சம்பாதிக்கலாம். பணம் இருக்கேன்னு உங்க அம்மா, அப்பா உங்களை வேளைக்கு ஆள் வச்சு பார்த்துக்கலையே?. உங்களுக்கு எல்லாமே அவங்களே பார்த்த பார்த்து செஞ்சாங்க. இப்போ உங்க சந்தர்ப்பம். நீங்க அவங்களை கவனிச்சுக்கணும். இப்போ நழுவறது தப்பா தோணலையா?", என்றவளை ஒருவித தெளிவுடன் பார்த்தான் வர்ஷன்.

"
என்னடா வெளிநாடு போற வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டதா பவித்ரா சொன்னா?", என்றார் வர்ஷனின் அம்மா

"
ஆமாம் , உங்களையும் அப்பாவையும் தனியா விட்டுட்டு எங்களுக்கு அங்க போக பிடிக்கலமா", என்ற வர்ஷன் பவித்ராவை நன்றியுடன் பார்த்தான்.

வர்ஷனின் தாய் கண்கள் நிறைய பெருமிதத்துடன் அவனை பார்த்தார்

 

Friday 19 November, 2010

பணத்தை புகையாக்குதல்

                         
"வணக்கம் அண்ணாச்சி"
"
அட, என்ன பாக்கறீங்க, உங்களத்தான். என்னை யார்னு தெரியலையா? ",

"
சரி விடுங்க. பேருந்து நிறுத்தம், தெருவோர தேநீர் கடை, பெரிய அலுவகங்களின் வெளியே இடது ஓரம், இல்லைனா வலது ஓரம், இப்படி எதாவது ஒரு இடத்துல நான் பார்க்க கூடிய நபர் தான் நீங்க. ஆனா உங்களுக்கு என்னை பார்க்க நேரம் இல்லாம போய் இருக்கலாம். ஏன்னா, அப்போலாம் நீங்க உங்க மன அழுத்தம் குறைவதற்காக, பணத்தை புகையாக்குறதுல ரொம்ப மும்முறமா இருந்துருப்பீங்க."

"
நீங்க புத்திசாலி, இப்போ புரிஞ்சிருக்கும் எதை பத்தி பேசறதுக்காக முயற்சி பண்றேன்னு. உங்களுக்கு ரொம்ப பிடித்தமான புகை பிடிக்கும் பழக்கம் பத்திதான் பேச போறேன்."

"
அட என்னடா இது, என் நிலைமை, வேலை பளு எல்லாம் இந்த சின்ன புள்ளைக்கு எங்க புரிய போகுது. அப்படி என்ன தெரியும்னு புதுசா சொல்ல போறா?. ஒரு சின்ன சந்து பொந்து கிடைச்சாலும் போதும், உடனே உள்ள புகுந்து மொக்கை போட ஆரம்பிச்சிடுவாய்ங்க . எங்களுக்கும் தெரியும் இதனால வர விளைவுகள் என்னனுலாம். நிறைய படிச்சுட்டோம்."

"
சரி... சரி...போதுங்க அண்ணாச்சி உங்க புலம்பல் என்னனு எனக்கு நல்லா கேட்குது. நா என்னத்த புதுசா கண்டுபுடிச்சா சொல்ல போறேன். அடிக்கடி நம்ம செய்தி தொடர்பு ஊடகங்கள்தான் இதை பத்தி நிறைய சொல்லுதே. பத்தாததுக்கு மருத்துவர்கள் வேற நம்ம வாய்ல நுழையாத பெயரை எல்லாம் சொல்லி, இந்த விளைவுகள் உங்களுக்கு மட்டும் இல்ல, இந்த பழக்கமே இல்லாத நம்ம சந்ததிகளையும் பாதிக்கும்னு , "ஜல்' புயலை கெளப்புறாய்ங்க."

"
ஹும் நாங்க இதுக்கெல்லாம் கலங்கறவைங்களா",ன்னு நீங்க சொல்றது கேக்குது.
நானும் இது வரும், அது வரும்னு சொல்லி உங்கள பயமுறுத்த வரல.

அதுக்காக இத விட வேணாம்னு சொல்லவும் வரல. விடறதுக்கு முயற்சி பண்ணலாமேன்னு தான் சொல்றேன்.
பலர் புகை பிடிச்சிட்டு நேர வீட்டுக்கு போய் உங்க குழந்தைய தூக்கலாம். உங்க சுவாசத்தில் இருக்கற புகை அந்த  குழந்தையின் சுவாசம் மூலமா அதன் நுரையீரலை பாதிக்கும்.

"
நாங்கதான் அதுக்கு பாக்கு, இன்ன பிற வாசனை பொருட்கள் பயன்படுதரமே.", னு சொல்றீங்க

"
சரி அதெல்லாம் இந்த வாடை பிடிக்காம முகம் சுளிக்கற பெரியவங்களை சமாளிக்க. ஆனா உண்மையில அந்த புகை கட்டாயம் மற்றவர் சுவாசத்தில் கலக்க வாய்ப்புகள் இருக்கு. அதுக்கு என்ன பண்ணுவீங்க? நீங்க அடுத்தவர் உடல் நலம் பற்றி கவலை படாதவரா இருக்கலாம் அண்ணாச்சி, உங்க உடம்பை பத்தியாவது கவலைப்படுங்க."

"
அதுக்கு என்ன பண்ணலாம்னு?", கேட்கறீங்களா. ஏதோ எனக்கு தோனுறதை சொல்றேன், நீங்க உங்களை மாற்றி கொள்ள முயற்சி பண்ணா சந்தோஷம்.

 1.
நீங்க மன அழுத்தம், வேலை பளு இப்படி உணரும் நேரத்துலதான் புகை பிடிக்க போறீங்க. உங்களுக்கு குழந்தைகள் இருக்கா? அவங்களை விட மன அழுத்தம் குறைக்கும் மருந்தை கடவுளால் கூட இனிமே கண்டுபிடிக்க முடியாதுங்க அண்ணாச்சி. உங்க குழந்தை விளையாடற, பேசற, பாடற இப்படி பட்ட நிகழ்வுகள் கட்டாயம் உங்க அதி நவீன செல்பேசியில் பதிவாகி இருக்கும்.உங்களுக்கு புகை பிடிக்க தோணும் போது எல்லாம், அந்த பதிவுகளை எடுத்து பாருங்க. உங்க மன அழுத்தம் கட்டாயம் குறையும்.

2.புகை பிடிக்க வெளியே போகும் போது, உங்க நீண்ட நாளைய நண்பர் அல்லது உறவினர் , இவங்க கூட எல்லாம் பேசணும்னு நினைப்பீங்க ஆனா
தள்ளி போய்கிட்டே இருக்கும். அவங்க கூட பேசுங்க . "ஒவொரு தடவையும் யார் கூடவாவது பேசி பணத்தை வீண் அடிகறதா?",ன்னு. நீங்க உங்க
உடம்பை கெடுத்துக்க பண்ற செலவை இப்படி பண்ணலாம். தப்பே இல்ல. மத்தவங்க கிட்ட நல்லா பெயராவது கிடைக்கும்.

3.
இதே மாதிரி உங்க மனைவி கூடவும் பேசுங்கஅவங்க சும்மா சும்மா  என் வேலைய கேடுக்காதீங்கன்னு  திட்டினா நான் பொறுப்பு இல்ல
அது உங்க குடும்ப விவகாரம்.

4 .
உங்களுக்கு பிடிச்ச நகைச்சுவை பதிவுகளை கூட பார்க்கலாம். மனசு விட்டு சிரிச்சா எரும மாட்டு மேல வர எமன் கூட ஏரோப்ளேன்ல போயிருவான்ல.
ஏதோ இவ்வளவுதான் இப்போதைக்கு தோணுச்சு. இன்னிமே தோணுச்சுன்னா அதை கண்டிப்பா இன்னொரு பதிவுல போடுவேன். இதோட விட்டாளேன்னு
பெருமூச்சு விடாதீங்க. பொறுமையா என்னை திட்டிகிட்டே வாசிச்சதுக்கு நன்றிங்க அண்ணாச்சி.


முகவரி

                                              

சென்றாய் தானாய் சென்றாய் ,
விருப்பம் இருந்தும் பறந்து சென்றாய்

நின்றாய் நேரில் நின்றாய்
தொட்டால் பனியாய் கலைந்து மறைந்தாய்

கனவுகள் காற்றை போன்றே கையில் சிக்க மறுக்கிறது
நினைவுகள் தீயை போன்றே உள்ளம் வரை சுடுகின்றது

நேற்று வரை நம்பிய நொடிகள் கண்முன்னே மறைகிறது
நாளை என்ற நம்பிக்கை இங்கே தூரம் சென்று சிரிக்கிறது

கண் முன்னே தோன்றிய இன்பம் என் பேரை மாற்றி சென்றதும் ஏனோ?
சகுனங்கள் கூட என்னை சகுனத் தடையாய் பார்த்திடுமோ?

விண்ணின் அழகைக் காண மண்ணை விட்டு சென்றதும் ஏனோ?
நீ இன்றி சொந்தங்கள் கூட முகங்கள் மாற்றி சென்றிடுமோ?

தொலைந்ததை தேடித் தோற்றேன்,
புதியதை தேடவும் பயந்தேன்

அடையாளங்கள் மாற்றவும் வெறுத்தேன்,
தானாய் மாறும் என்பதை மறந்தேன்

அந்நியர் பலரின் பார்வைகள் துளைக்க
துணையற்ற வேதனை உணர்ந்தேன்

பாதை மறந்து பாதியில் நின்றேன்
உறவாய் புதிய பாதையை கேட்டேன்

என் நெஞ்சமும் உனக்கு புரியும்
உன் நேசமும் என் மனம் அறியும்

உண்மை நிலையை நீயே அறிவாய்
புதிய முகவரி தேடித் தருவாய்

Sunday 7 November, 2010

தேவதைத் திருடன்



நாம் இருவர் மட்டும் அறிந்த உனக்கான என் கவிதைகள்
காதல் உலகில் பிரசுரமாகி விட்டதாம் ,
"
தேவதைத் திருடன்" என்ற பெயரில்
இன்று காதல் உலகின் மொழியாகிப் போனது என் கவிதைகள் 

நீ என்ன காதலை கண்டு பிடித்தவனா?
ரதி கூட பொறாமைகொள்கிறாள் என்னை பார்த்து

சாதாரண மனுஷியாகத்தானடா திறிந்தேன்?
ரசித்து ரசித்தே என்னை தேவதையாக்கி  விட்டாய்
மமதை தலைக்கேறி விடுகிறது இந்த
தேவதைத் திருடனுடன் நடக்கும் பொழுது

Thursday 14 October, 2010

பழமொழிகளும், புரிதலும்






                   பழமொழிகள் - பொதுவா யாரையாவது கிண்டல் பண்றதுக்கோ, இல்லனா காலணா  செலவு இல்லாம அறிவுரை சொல்றதுக்கோ பயன்படுத்தப்படுகிற ஒரு வரி வாக்கியங்கள். இன்னைக்கு நம்மால் சொல்லப்படுகிற பழமொழிகளோட உண்மையான அர்த்தம் நம்ம பேச்சுவழக்கு காரணமா நிறைய மாற்றப்பட்டிருக்கு.


எனக்கு தெரிஞ்ச ஒரு சில பழமொழிகளோட நடைமுறை பயன்பாட்டையும், அதன் உண்மையான அர்த்தங்களும் இந்த பதிவுல போடலாம்னு இருக்கேன்.


1) அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்.


தற்போதைய பயன்பாடு: கூடப் பொறந்த பிறப்புங்க சொல்லி கூட திருந்தாத பயலுங்க, நாலு அடி அடிச்சா தானா திருந்துவாய்ங்க.



உண்மையான அர்த்தம்: அடி என்பது கடவுளின் திருவடி. நமக்கு துன்பம் வரும் போது நம்முடைய இரத்த சொந்தங்கள் கூட உதவாமல் போகலாம். ஆனால், இறைவனின் திருவடியை சரணடைந்தால், நமக்கு கட்டாயம் நல்வழி கிட்டும்.




2)ஆறிலும் சாவு , நூறிலும் சாவு.


தற்போதய பயன்பாடு: ஒரு மனிதனுக்கு சாவுங்கறது ஆறு வயசுலயும் ஏற்படலாம், நூறு வயசுலயும் ஏறபடலாம். அதனால எல்லாத்துக்கும் ரெடியா இருங்கப்பா.


உண்மையான அர்த்தம்: மகாபாரதம் காவியத்தில் கொடைவள்ளல் கர்ணன் பிறப்பால் பஞ்ச பாண்டவர்களின் சகோதரன். ஆனால் அவனுடைய சிநேகத்தால் துரியோதனனின் பக்கம் நின்றான். குந்தி தேவி வந்து குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் பக்கம் நிற்க சொன்ன போது , தனது அன்னையிடம் ,"ஆறிலும் சாவு, நூறிலும் சாவு", என்றான் .
அதாவது, நான் பாண்டவர்களுக்கு துணையாய் ஐந்தோடு , ஆறாவது ஆளாய் நின்று போரிட்டாலும், எனக்கு மரணம் உறுதி. கௌரவர்கள் நூறு பேருக்கு கீழ் நின்று போரிட்டாலும் மரணம் என்பது உறுதி. நான் என் நண்பன் துரியோதனன் செய்த செய்நன்றி மறவாமல் இருக்க அதர்மம் பக்கம் நின்று போரிட தயாராக உள்ளேன் என்றான்.


எந்த காரணத்தை கொண்டும் செய்நன்றி மறவாதிருக்கு வேண்டும் என்பதற்கு இந்த பழமொழி ஒரு உதாரணம்.


3)சட்டியில் இருக்கறது அகப்பையில் வரும்


தற்போதய பயன்பாடு: நம்ம கைல எவ்ளோ பணமோ, பொருளோ இருக்கோ அந்த அளவுக்குதான் பிறருக்கு உதவி பண்ண முடியும் , இப்படியும் சிலர் சொல்வாங்க.
நம்மகிட்டா எவ்வளவு அறிவும், திறமையும் இருக்கோ , அவ்வளவு பலன் தான் கிடைக்கும் , இப்படியும் சிலர் சொல்வாங்க.
உண்மையான அர்த்தம்: இந்த பழமொழி நமது பேச்சு வழக்கால் முற்றிலும் மற்றம் அடைந்துள்ளது. "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"
திருமணம் ஆகி நீண்ட நாள் ஆகியும் குழந்தை பேரு இல்லாத பெண்கள், சஷ்டியில் இறைவனை வேண்டி விரதம் இருந்தால், அவர்களின் அகப்பையில்
அதாவது கருப்பையில் குழந்தை உண்டாகும். நமது பேச்சு வழக்கால் 'சஷ்டி' என்பது 'சட்டி' என்றானது.


4)ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்.


தற்போதய பயன்பாடு: மூல நட்சதிரதுல ஆண் பிள்ளை பிறந்தால் அவன் அரசன் போல வாழ்வான், அதே நட்சதிரதுல பெண் பிள்ளை பிறந்தால் அவள் வாழ்கை நிர்மூலம் (நன்றாக இருக்காது)


உண்மையான அர்த்தம்: இந்த பழமொழியும் பேச்சு வழக்காலும் , மனிதர்களின் வஞ்சக நாவினாலும் மாற்றப்பட்டுள்ளது
"ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மலம்".
நிர்மலம் என்ற சொல் காலபோக்கில் நிர்மூலம் என்று மாற்றம் அடைந்ததினால
இன்னைக்கு ஜாதகத்தை ரொம்ப நம்புற பெரியவங்க,


" மூல நட்சதிரதுல பொறந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வந்தால் நல்லதில்லை"
இப்படின்னு சொல்லி நிறைய பெண்களோட வாழ்கையை கேள்விகுறி ஆக்கிட்டு இருக்காங்க
உங்க அம்மா அப்பாவும் இப்படி நினைச்சா இத போய் அவங்க கிட்ட சொல்லி புரிய வைங்க நண்பர்களே.


5)இலை மறைவு காய் மறைவு


இதற்கு இப்போதைய பயன்பாடு சரியா தவறான்னு தெரியாது, ஆனா இந்த பழமொழியை வச்சு, நான் கேட்ட சுவாரஸ்யமான கதையை சொல்றேன்


இங்க நிறைய பெண்களுக்கு கணவன் சாப்பிட்ட எச்சில் இலையிலோ, இல்லனா எச்சில் தட்டிலோ சாப்பிடறதுங்கறது ஆணாதிக்க உணர்வின் காரணமா உண்டான வழக்கம், அப்படிங்கற எண்ணம் இருக்கலாம். இதற்கு பின்னாடி இருக்கற உண்மையான அன்பின் வெளிப்பாடு பற்றி நம்மல்ல பலருக்கு தெரியாது.


நம்ம தாத்தா, பாட்டி காலத்துல எல்லாம் தினமும் வாழை இலையில் சாபிடற வழக்கம் இருந்தது. வீட்டுல இருக்கற பெண்கள் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறிட்டு கடைசில சாபிடறதை வழக்கமா வச்சுருப்பாங்க. சில சமயங்கள்ல ஒரு சில பதார்த்தங்கள் பத்தாம போகலாம். அப்போலாம்  கணவன் சாப்பிடும் போது தன்னோட மனைவிக்கு பிடிச்ச உணவு வகைகள் இருந்தா அதை அப்பளம் அடியிலோ இல்லனா அப்படியேவோ மிச்சம் வைப்பாங்க, அடுத்ததா அதே இலைல சாபிடற மனைவிக்காக.


         கணவன் சாப்பிட்ட தட்டுலையோ, இல்ல இலையிலோ மனைவியும் சாப்பிடறதுங்கறது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு இல்ல உண்மையான காதலின் வெளிப்படா அன்னைக்கு இருந்தது. கூட்டு குடும்பத்துல இருந்த அவங்களால் தங்களோட அன்பை இப்படி சின்ன சின்ன விஷயங்களால்தான் வெளிபடுத்த முடிஞ்சது. இந்த காலத்தில அன்பை வெளிபடுத்த நிறைய நேரமும் தனிமையும் இருந்தும் நிறைய தம்பதிகள் விவாகரத்து வரைக்கும் போறாங்க. மனசு விட்டு பேசனும்னு இல்லையே, சின்ன சின்ன அக்கறையிலும் , பார்வையிலுமே அன்பை வெளிபடுத்த முடியுமே. இதை புரிசுகிட்டா விவகரதுங்கறது இல்லாமலே போகலாம்.

Monday 11 October, 2010

வேண்டும் இந்த அவஸ்தைகள்


என்றும் தாண்டி செல்லும் தெருவோர பிள்ளையாருக்கு
லஞ்சமாய் மூன்று தோப்புகரணம் போட்டு

பரீட்சை அட்டையில் எம்மதமும் சம்மதமாய்
அனைத்து கடவுள்களின் படங்களையும்  ஒட்டி

முன்னிருக்கை மாணவன் வேகமாக பதில் எழுத
அதை பார்த்து பதில் மறந்த நிமிடம் கடந்து

காற்றாடி இருந்தும் வேர்த்து கொட்டி
விடைத்தாளை நனைத்து

கடைசி நேரத்தில் கோணல் மாணலாய்
நூல் சேர்த்து கட்டி  விடைத்தாளை வழியனுப்பி
பெருமூச்சு விட்டு

இவை அனைத்தும் வாழ்வில் மீண்டும்
வேண்டுமென ஏங்கும் அவஸ்தைகள்

 

Wednesday 22 September, 2010

மௌன மொழி


என் மௌனத்தின் வார்த்தைகளை
உன் புன்முறுவலில் வாசித்த நேரம்,
உன் கண்கள் என் நாணத்தை கண்டு கொண்டதோ?

நம் மௌனம் வெல்லும் சந்திப்புகள்
நீண்டு கொண்டே செல்கின்றன
இருந்தும் ஆவல் கொண்டேன் மௌன மொழி கற்பதற்கு

வார்த்தைகள் ஆயிரம் உதிர்த்தும்
உன் ஒற்றை பார்வையின் காதலை
அது சொல்லாததேன்?

பேச தெரிந்தும் ஊமையான இதழ்களுக்கு
மௌன மொழியின் மீது உள்ள காதலை யார் அறிவார்?

இந்த மௌன உலகத்திற்குள் சஞ்சரிக்கும் முன்
தெரிந்திருக்கவில்லை வெளியே செல்ல முடியாதென்று
தெரிந்த பின் கவலை கொள்ளவில்லை
வெளிய செல்வதற்கு

Friday 10 September, 2010

ஊடல்

சில மணி நேரத்திற்குள் புயலும், தென்றலும்                                      மாற்றி மாற்றி
வீச முடியுமா ஒரு இடத்தில
இல்லை என்றால் நுழைந்து பார் என் இதயத்தினுள்
எல்லா வானிலை மாற்றமும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது
என்னுள் உன்னால்
        



                                                                                         

அதெப்படி உன்னை அடிக்கும் பொழுதுகளில் மட்டும்
மென்மை கூடி விடுகிறது என் கைகளில்?
வலிக்கவே இல்லை என்று அடம் செய்கிறாய் 
 

என்ன மாயம் செய்தாய் உன்னை கண்டால்
என் கோபங்கள் கூட கவிதைகளாக மாறி
என்னை இம்சிக்கிறது                    

                                                        

உன் காதுகளை கடிந்து கொள்கிறேன்
நீ தூங்கும் பொழுதுகளில் தேவையற்ற சப்தங்களை கேட்டு உன்னை எழுப்பி விடுகிறதே

Thursday 26 August, 2010

ஏன்




என் வாழ்வினில் சிறப்பானதேன்?
உனை நெஞ்சம் ரசித்த நொடி

என்  நெஞ்சமும்  மறக்காததேன் 
நம் முதல் சந்திப்பினை

என் செவிகளும்  சேமித்ததேன்?  
 உன் முதல் வார்த்தைகளை

என் கால்களும் கெஞ்சுவதேன்
 உன் வீடு நோக்கி செல்ல

என் நாணமும் மிஞ்சுவதேன் 
உன் விழிகளை பார்க்கையிலே

Thursday 5 August, 2010

மாற்றப்படாத நியதிகள்



மான் கொன்று,
மரம் துளைத்து,
புலி மீது வில் பாய செய்ய
வித்தகன் இன்று இல்லை

ஆனால் வள்ளுவனின் வாசுகியாய் இன்றைய பெண்ணும்
இருக்க வேண்டுமென வரையறை செய்வார்

கல் தூக்கி தீரம் காட்ட,
ராமன் போல் ஒழுக்கம் கொள்ள,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு பெண்ணும் நிலம் பார்த்து பேச,
நிலமகள் நோகாமல் நடக்க வேண்டுமென்பார்

நீதியோடு வரி கட்ட,
நியாயதோடு ஓட்டு போட,
அதிகம் பேர் இன்று இல்லை

ஆனால் ஒவ்வொரு ஆளுமையும் மனுநீதிசோழனின்
காலத்திற்கு நிகராய் இருக்க வேண்டுமென்பார்

இவை யாவும்  மாற்றப்படாத நியதிகள் 
மற்றும் மாற்றமுடியா நியதிகள்

Wednesday 4 August, 2010

துவக்கமும் முடிவும்

அன்பின் அழகே
சர்வமும் அழகு உன் கருவிழிக்குள்ளே

கருவிழி சிறையினுள் சிக்கி கொண்டேன்
மீள வழி இருந்தும் விருப்பம் இல்லை

இல்லை என் நினைவில் வேறொன்றும்
உனை பற்றி நினைக்க துவங்கினால்

துவங்குவேன் ஒவ்வொரு பொழுதையும் உன்
மலர்ந்த புன்னகை முகம் பார்த்து

பார்த்து பார்த்து சேகரித்து கொண்டேன்
உன் வார்த்தைகளில் இருந்த அன்பை

Thursday 29 July, 2010

மன்னித்து விடு



என் வகுப்பு தோழனே,

கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,

என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,

என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,

தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,

வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,

என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,

நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,

பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,

எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,

சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,

'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,

எப்படி சொல்வது உன்னிடம்?

எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,

உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,

என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,

எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,

எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,

என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,

வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?

பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?

உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்

எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?

என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது

மன்னித்து விடு என்னை?

Tuesday 20 July, 2010

நம் நட்பு




சரியென்று சொல்ல முடியவில்லை,
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

வார்த்தைகள் பரிமாற்றம் எண்ணங்களின் பரிமாற்றமாய்
உரு மாறிய பின் உணர்ந்தேன் நமது நெருங்கிய நட்பை

மணித்துளிகள் கரைவது அறியாமல் பேசிய வார்த்தைகளில்
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

பிரிந்து விடும் என்று தெரிந்தும் உருவாக்கிய நட்பை
சரியென்று சொல்ல முடியவில்லை,
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

இறுதியில்  உணர்ந்தேன் அந்த உறுத்தல்
நம்மை கடந்து சென்றவர்களின் பார்வையினால் வந்தது என்று

Tuesday 13 July, 2010

அழகிய சிறை



எத்தனை முறை பார்த்தாலும் என் கண்ணாடி என்னை
அழகாய் காட்டவில்லையடா உன் கருவிழி போல.

உன் கருவிழிக்குள் சிக்கித் தவிக்கும்
என் சுந்தர வதனத்தை காணவே தினம் உன் விழி நோக்குகிறேன்

அப்படி என்ன அதிசயமான பாதரசம் பூசி உள்ளாய்
உன் விழிச் சிறைக்கு

எத்தனை முறை நீ விடுவித்தாலும் தானாக வந்து அடைப்பட்டு
கொள்கிறேன் அந்த அழகிய சிறைக்குள்

Wednesday 7 July, 2010

பௌர்ணமி நிலவே




என் வளர்பிறை நிலவே
இலக்கணம் பார்க்கவில்லை உன் மனதின் மழலை பேச்சிற்கு

உனை பார்க்க துடிக்கிறேன்
என் நாடித்துடிப்பை நானே எண்ணி பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து

மயக்கமும் , சோர்வும் தான் என்றாலும் பொறுத்து கொண்டேன்
அது உன்னால் ஏற்பட்டது என்பதனால்

எத்தனை முறை ஒவ்வாமை ஏற்பட்டாலும் உண்ண மறுக்கவில்லை,
உன் சிறு உடல் தழைப்பதற்காக

இன்னிசைக்கே அடிமை ஆகாத என் மனம்
உன் அதிவேக இதய துடிப்பை மட்டும் மண்டியிட்டு கேட்கிறது

உன் அழகை கண்டு பெருமைப்பபட்டு கொண்டேன் - உனை
அதிநவீன அறிவியல் சாதன உதவியுடன் அரை குறையாய் பார்த்த பொழுதுகளில்

பல இரவுகளில் தூக்கம் தவிர்த்தேன் - நீ
தூக்கம் இன்றி எனை உதைத்து விளையாடுவதை ரசிப்பபதற்காக

மௌன விரதம் இருந்தேன் என் வளர்பிறை வயிற்றினுள்
நீ அசைவற்று உறங்கிய நேரங்களில் எல்லாம்

தவம் இருக்கிறேன் என் நிலவு தன் முழு உருவம்
காட்ட போகும் அந்த பௌர்ணமி நாளுக்காக

Friday 2 July, 2010

யுத்த பூமி



அவர்களின் கண்களில் பொங்கிய பகைமை
கானல் நீரினால் பொங்கிய வெள்ளம் என்பதை உணர மறுப்பதேன்?

முதன் முதலில் பார்த்து கொண்டாலும்
அவர்கள் பகைவர்கள் தானாம்

நான்கடி தொலைவில் நின்றாலும் அவர்களின்
தேசங்கள் வேறாகி போன வினோதமென்ன?

என்று ஆரம்பமானது இந்த பகைமை?
ஆதாம், ஏவாலின் சந்ததிகள் வளர ஆரம்பித்ததில் இருந்தோ?

அவர்களின் ஆயுதங்கள் எதிரே உள்ளவனின்
இரத்தத்தின் நிறத்தை அறியும் ஆவலில் முன் வந்து நிற்கிறதோ?

உடைகளின் நிறங்களில்தான் அவர்களுக்குள் வேற்றுமை
கொலை வெறி கொண்ட கண்களிலோ, அவை பார்க்கும் குறியிலோ அல்ல

இத்தனை பகைமை கொண்ட இவர்கள் யார் தெரியுமா?
ஏதோ இரு நாடுகளின் எல்லை காவலர்கள்!

Thursday 24 June, 2010

அறிந்தும் அறியாமலும்



எனை அறியாமல் திரும்பி பார்க்கிறேன்
உன் பெயர் கேட்ட மறு நொடியில்

எனை அறியாமல் உன் பார்வையுடன் பரிமாற்றம் நடக்கிறது
நீ என்னை கடக்கும் அந்த நொடிகளில்

எனை அறியாமல் ரசிக்கிறேன் நீ பேசி விட்டு
பதிலுக்காக காத்திருக்கு அந்த கண நேர மௌனத்தை

எனை அறியாமல் பார்த்து கொண்டிருக்கிறேன்
நீ முகம் பார்த்துவிட்டு சென்ற என் வீட்டு கண்ணாடியை

எனை அறியாமல் தொட்டு பார்த்து கொள்கிறேன்
நீ தொட்டு விட்டு போன என் தோட்டத்து செடியின் இலைகளை

எனை அறியாமல் சிரித்து விடுகிறேன்
நீ முணுமுணுத்த வரிகளை வானொலியில் கேட்கும் போது

எனை அறியாமலே மனனம் செய்து கொள்கிறேன்
நமது நீண்ட உரையாடல்களை

எனை அறிந்தே என் விருப்பத்தை சொல்கிறேன்
நீ கனவுகளில் வரும் பொழுது மட்டும்

எனை அறிந்தே காத்திருக்கிறேன்
நீ காதல் சொல்லும் தருணத்திற்காக

Tuesday 22 June, 2010

மயக்கம்

உன் பிஞ்சு விரல்களின் தொடுகையும்
சின்ன இதழ்களின் உளறலும்
உன் இதயத்துடிப்பை என்ன முடிந்த நெருக்கமும்
என்னை மயங்க செய்யுதடா
உன்னை தூங்க வைக்கும் பெருமுயற்சியில். 

Tuesday 15 June, 2010

முதல் கனாவே


வேப்பங்கொழுந்து ஒன்று பலாவின் சுவை தந்தது
உனை பார்த்த முதல் நிமிடம்

காற்றுடன் கதை பேசினேன், அதன் காதலை பற்றி கேட்கிறேன்
உனை சந்தித்த முதல் மாலையில்

உனை போல் பேசி பார்த்தேன், கண்ணாடியும் கேலி செய்தது
உனை பார்த்த முதல் தினத்தில்

உயரம் சரியோ என்று பலமுறை யோசித்தேன்
எனக்குள் நானே அளந்து கொண்டேனடா உனை

வாசலை தினம் பார்கிறேன் உன் வருகையை எதிர்பார்கிறேன்
என் விலாசம் அறிவாயோ என்பதை மறந்து

நம் கற்பனை சண்டைகளுக்கு வசனங்கள் எழுதி கொண்டேன்
காவியம் ஒன்றாய் அது மாறுமென தவம் இருக்கிறேன்

உன் ரசனை அறியவில்லை இருந்தும் வித விதமாய்
அலங்கரித்து கொண்டேன்

முல்லை மலரும் வேளையிலும் முள்ளாய் தைத்தது உன் நினைவு

நீ என்ன தொடுவானமா, தொட முயன்று தோற்று போனேன்

உன்னுடனான சம்பாஷனைகள் கனவாக தெரியவில்லை
உன்னுடனான வாழ்கைக்கு ஒத்திகையாக தெரிகிறது

கனவுதான் நீ என்று அறிந்தும் உனக்கான வருகையை எதிர்பார்கிறேன்
நீ அதிகாலை கனா என்பதனால்

வந்து விடு என் முதல் கனாவே
நிறைத்து விடு என் பகல் பொழுதுகளையும்

Sunday 6 June, 2010

ஞாபகம் வருதே



அனைவருக்கும்
பள்ளி வாழ்கை என்பது மறக்க முடியாத ஒன்று தானே. அதே போல்தான் எனக்கும் அந்த குறிபிட்ட நாள் 6 வருடமாகியும் மறக்க முடியாத ஒன்றாக ஆனது.

நான் இப்படி எல்லாம் முன்னுரை கொடுக்கவும் ஏதோ நான் வாழ்கையில் மிக பெரிய சாதனை செய்த நாள்னு மட்டும் நினைக்க வேண்டாம். அன்னைகுதான் நாள் முழுக்க கைப்புள்ள மாதிரி சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் அடி வாங்கினேன். சரி உள்ள போவோமா ...

சரி எல்லாரும் கண்ணுக்கு முன்னாடி கொசுவர்த்தி சுருள சுத்தவிடுங்க, அப்புறம் ஆட்டோகிராப் music கண்டிப்பா bockground-ல ஓடணும் (நம்ம பாரம்பரியத்தை மறக்க கூடாதுல)

அப்போ நான் 11-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேங்க. எப்பவும் போல இல்லாம அன்னைக்கு கொஞ்சம் வேகமா துயில் எழாமல் போனதனால அம்மா ரொம்ப பாசமா என்ன அடிச்சு எழுப்பினாங்க. கூடவே நாலு நல்ல வார்த்தை வேற ."அடியே குட்டிபிசாசு, எரும மாடு மாதிரி விடிஞ்சது கூட தெரியாம தூங்கிட்டு இருக்கியே,......(இப்போ கன்னத்துல பாசமா தட்டி, செல்லமா காதை திருகறாங்க -பின்குறிப்பு:ஆனா ரொம்ப வலிச்சது) பொட்ட புள்ள இப்படி தூங்கினா வீடு உருபடறதுக்கா எழுந்திரி டி....

இப்பவும் எழுந்திரிகலைன்னா அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியும்(அது எங்க குடும்ப ரகசியம் வெளில சொல்றதில்லை ) அதனால் நான் கொஞ்சம் கெத்த maintain பண்ணிட்டு எதுவுமே நடக்காத மாதிரி எழுந்திரிச்சேன்.

ரொம்ப அவசரபடாம கிளம்பி, make up எல்லாம் முடிச்சுட்டு கடிகாரத்தை பார்த்தா........ மணி 8.45.

"ஹையோ இன்னும் 15 நிமிஷத்துக்குள்ள போகலைனா அந்தர சல்லி ஆகிடுவியே மிதிலா", இப்படி mind voicela கூவிகிட்டே booksa எல்லாம் பைக்குள்ள அடுக்காம அப்படியே தூக்கி போட்டுகிட்டு baga cycle carrierla மாட்டுனவ அப்படியே போய் இருந்தா எந்த அக்கபோரும் அன்னைக்கு நடந்தே இருக்காது . ரொம்ப நல்ல பொண்ணா "அம்மா schoolku போய்ட்டு வரேன்னு", கத்த
அங்க தான் கதைல turning pointe.

"அடியே காலைல சாப்பிடவே இல்ல சாப்பிடாம போனா உன்ன சாயங்காலம் வீடுக்குள்ள விட மாட்டேன்", என்றபடி அம்மா ஓடி வந்தாங்க

" ய்யோ அம்மா late ஆகிடுச்சு.......", நான் முடிக்கறதுக்குள்ள என் காதை பிடிச்சு திருகி கிட்டே உள்ள கூட்டிட்டு போனவங்க ஒரு தட்ல சாப்பாட போட்டு
ஊட்டி விட்டங்க. இவ்ளோ பாசமா ஊட்டி விடறாங்களேன்னு மட்டும் நினைக்காதீங்க,
"விவசாயி நாத்து நடறது, களை பறிக்கறது , பூச்சி மருந்து அடிக்கறதுல இருந்து ஆரம்பிச்சு.......அதை எங்கப்பா கஷ்டபட்டு schoola பசங்களை அடிச்சு வாத்தியார் வேலை பார்த்து வாங்கின சம்பளத்துல(இருங்க மூச்சு விட்டுக்கறேன்) , அரிசி கடைல போய் அரிசி வாங்கின வரைக்கும் சொல்வாங்க. அத்தனையும் நான் அடி வாங்கி கிட்டே கேட்கணும், சாப்புட வேற செய்யணும், கூடவே வலி தாங்காம அழுகற மாதிரி நடிக்க வேற செய்யணும். ஒரு 16 வயசு பொண்ணு எப்படிங்க இப்படி multiple role பண்ண முடியும், கஷ்டமில்ல(நீங்க அழாதீங்க, கதைய கேளுங்க)

இப்படியே நான் சாபிட்டு முடிக்க 9 மணி ஆகிடுச்சு. அவசர அவசரமா cycle-a எடுத்துகிட்டு schoolku 5 நிமிஷத்துல போய் சேர்ந்தா அங்க classla prayer நடக்குற சத்தம் கேட்டது.என்ன மாதிரியே இன்னும் ரெண்டு பொண்ணுங்க , நாலு பசங்கனு size வாரியா தயங்கி தயங்கி வந்துகிட்டு இருந்தாங்க.

"கடவுளே என்ன மட்டும் காப்பாத்து", அப்படின்னு ரொம்ப நல்ல மனசோட வேண்டிகிட்டு அப்படியே cylce stand பக்கமா போனா அங்க ரொம்ப strictana P.T sir ரவி நின்னுகிட்டு இருந்தாரு. கைல மாட்டை அடிக்கற மாதிரி பெரிய பிரம்பு வேற.
அவர் ஏற்கனவே late-a வந்த பசங்க duck walk பண்றத பார்த்துகிட்டு இருந்தாரு .

பசங்க எல்லாம் காதுல கை வச்சுக்கிட்டு வாத்து மாதிரி நடக்குறதை பார்க்க சிரிப்பா வந்தது. அட என்னை கெட்டவள்னு நினைக்காதீங்க
"துன்பம் வரும் வேலையிலே சிரிங்க " , அப்படின்னு
பெரியவங்க சொல்லி இருக்காங்க (அது யாருக்கு துன்பம் வரும் போதுனு சொல்லலியே.......)

ரவி sir கண்ணுல படாம அப்படியே nicea.... es ஆகிடலாம்னு பார்த்த நான் பழக்க தோசத்துல cycle standல நின்னுகிட்டு இருந்த நாலு cyclea தள்ளி விட்டுட்டு என்னோடதை வைச்சேன..... சத்தம் கேட்டு திருமபிட்டார் நம்ம கதையோட தற்போதய வில்லன் ரவி sir,

"யே யாரது..... பொட்ட புள்ளைக கூட வேகமா வாறது கிடையாது.. யாரு அழகரா வா வா(என் அப்பா அழகர்சாமி அந்த schoola தான் வாத்தியாரா இருந்தாரு ... அதனால அங்க நான் கொஞ்சம் popularunga. எல்லாரும் என்னைய "அழகர்"னு -தான் கூப்பிடுவாங்க )

இப்போ புது பலியாடு மாட்டினதால ரொம்ப சந்தோசமா என்னை நோக்கி வந்தவரு "வாத்தியார் புள்ளையே இப்படி சாவகாசமா வந்தா மத்த புள்ளைக கெட்டு போய்டாது"- வாய் பேசிட்டு இருக்கும் போதே அவர் கைல இருந்த பிரம்பு என் முட்டிக்கு கீழ பேச ஆரம்பிச்சது.....அப்படியே நாலு அடி வாங்கின நான் வாயை மூடிட்டு சும்மா இருக்காம
"sir sir உடம்பு சரி இல்லை அதான்...."-அப்படின்னு இழுத்தேன்.

"என்ன கழுத உடம்புக்கு" அப்படின்னாரு கொஞ்சம் கூட கரிசனமே இல்லாம.

இப்படி கேட்டதுல confuse ஆனா நான் "அ..அ..து வந்து காது வலி sir", அப்படின்னு நெத்தியில கை வைக்க "அப்போ உனக்கு காது என்னை மூளை இருக்கற இடத்துலையா இருக்கு", அப்படின்னு கேட்டு மாத்தி மாத்தி அடிச்ச இடத்துலேயே அடிச்சாரு.

வலி தாங்காம நான் குதிக்க என்னோட நீளமான சடையும் சேர்ந்து ஆடிச்சு. அங்கதான் வச்சாரு கடவுள் எனக்கு அடுத்த ஆப்பு.

என்னோட நீளமான கூந்தல் தெரியணும்னு ribbon வச்சு மடிச்சு கட்டமா அப்படியே விட்டுருந்த ஜடையை பார்த்தவரு "school rules உனக்கு தெரியாது என்ன style வேண்டி இருக்கு உனக்கு......இந்த பொட்ட கழுதைகளே இப்படித்தான்..", இன்னும் நாலு அடி அதிகமா வாங்கினேன்.

அதுக்குள்ள prayer முடிஞ்சு bell அடிக்க "போய் தொலை classku" அப்படின்னு பெரிய மனசு பண்ணி விட்டாரு . கூடவே என் பின்னாடி அடி வாங்க readya நின்னுகிட்டு இருந்த மத்த பசங்களையும் சேர்த்து விட,

"கடவுளே you too ", அப்படின்னு மேல இருக்கறவரை திட்டிகிட்டே கிளாஸ் ரூம்க்கு வந்து சேர்ந்தா அங்க அடுத்த ஆப்பு காத்துகிட்டு இருந்தது..honeybell ரூபத்துல......(எங்க கிளாஸ் teacher தேன்மணி அவர நாங்க செல்லமா honeybell-னு தான் சொல்வோம்).

"May I come in sir ",அப்படின்னு மெதுவா சொன்னேன் ஒட்டு மொத உலகத்துலயும் நான்தான் அப்பிராணி பொண்ணு மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு.

slow motionla திரும்பி பார்த்த honeybell, என்னை பார்த்ததும் ஏதோ அவர் வீட்டுல புகுந்து கொள்ளை அடிச்ச திருடனை பார்க்கற மாதிரியே பார்த்தாரு...என்னை நோக்கி வந்தவரு, கைல இருந்த english bookala என் தலைல நாலு தட்டு தட்டினாரு . அவர் ஒவ்வொரு தடவை தட்டும் போதும் என் மூக்குகண்ணாடி நழுவி கீழே போக அதை நான் சரி பண்ணிகிட்டே அடி வாங்கினேன். இது ஏதோ பெரிய நகைச்சுவை மாதிரி classla இருந்த எல்லாரும் சிரிச்சாங்க(அதுவும் முக்கியமா நாலு பசங்க ரொம்ப சிரிச்சானுக, அவிங்க எல்லாம் எங்க அப்பாகிட்ட அடி வாங்கினவைங்க ) "பன்னி பன்னி என்னைக்காவது ஒழுங்கா இருக்கியா, நீ நேத்து கூட late ஆ தான வந்த", அப்படின்னாரு.

"இல்ல sir", அப்படின்னு பம்மிங்க்ஸ் of இந்தியாவா மாறி சொன்னேன்.

"உன்னை எல்லாம் இப்படியே விட்டா சரிப்பட மாட்ட",
"அச்சோ என்ன பண்ண போறாரு ", இது என் mind voice,
"உங்க அப்பா கிட்ட சொன்னாதான் நீ சரிபட்டு வருவ",
"ச்சே இவ்ளோதான, நான் என்னமோ ஏதோனு பயந்து இல்ல போய்டேன்", mind voice,

ஒரு வழியா பெரிய மனசு பண்ணி என்னை என் இடத்துல போய் உக்கார விட்டாரு.
சரி இனிமேலாவது இந்த நாள் இனிய நாளாக இருக்கணும்னு நினைச்சுட்டு போய் உக்கார்ந்தா

"செம்ம காமெடி டி", என்று எனக்கு ரெண்டு பக்கமும் உக்காந்து இருந்த temprary துரோகிகள்
சிரிச்சாங்க. கடுப்பை control பண்ணிட்டு english booka எடுத்து வச்சா honeybell கிட்ட இருந்து அந்த கொடூர வார்த்தைகள் வந்தது

"எல்லாரும் நான் சொன்ன அந்த ரெண்டு essay படிச்சிட்டு வந்துடீங்களா. போய் வரிசையா உக்கார்ந்து எழுதுங்க போங்க", அப்படின்னு சொன்னாரு. எல்லாரும் ஏதோ எங்களுக்கும் அந்த situation-க்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி குனிஞ்ச தலை நிமிராம உக்காந்திருந்தோம் ஒரு சில கெட்ட தோழர், தோழிகளை தவிர.

"என்ன அந்த 8 பேர் தவிர வேற யாரும் படிச்சுட்டு வரலையா. காலைல வந்த உடனே .................", இப்படி ஆரம்பிச்சவரு தொடர்ந்து 5 நிமிஷம் பேசினாரு. அப்போ அதெலாம் காதுல விழாததினால இப்போ நியாபகம் இல்லை.

"எல்லாரும் வந்து முட்டி போடுங்க", அவர் கடைசியா சொன்னது மட்டும் காதுல விழுந்தது. வேற வழி இல்லாம பசங்க எல்லாம் class-ku வெளியிலும், பொண்ணுங்க உள்ளும் முட்டி போட்டோம்.

"ச்சே இன்னைக்கு நேரமே சரி இல்ல", இப்படி நிறைய பேரோட mind voice கேட்டது.

ஒரு 10 நிமிஷம் போயிருக்கும் , அப்போன்னு பார்த்து சரியாய் ஆஜரானான், என் அப்பாவோட மதிப்பிற்குரிய மாணவன் ஒருத்தன்.

"சார், மிதிலா அக்கா சாப்பாடு எடுத்துட்டு போக மறந்துட்டாங்களாம், எங்க சார் குடுத்துட்டு வர சொன்னாரு.", அப்படின்னான் ரொம்ப பவ்யமா.

"இதோ முட்டி போட்டுக்கிட்டு இருக்கு பார் குடுத்துட்டு போ. நல்லா தெம்பா சாப்டுட்டு முட்டி போடட்டும்", அவர் சொல்லவும் அவன் என்னை பார்க்க, "அங்க வச்சுட்டு போ", அப்படின்னு சைகைல சொன்னேன். அவன் என்னை பார்த்து நக்கலா சிரிச்சிட்டு போகும் போது தெரியாது இவன் தான்
அடுத்த வில்லன்னு.

ஒரு வழியா அவர் கிட்ட இருந்து தப்பித்து, மூணாவது பாடவேளை வரை நல்லா தான் போயிட்டு இருந்தது. மூணாவது பாடவேளைக்கு வந்த இயற்பியல் teacher ஜீவா வசந்தி, உள்ள நுழைஞ்சதும் கேட்ட முதல் கேள்வியே

"first hour யாரோடது , எல்லாரும் முட்டி போட்டீங்களா " , இப்படி கேட்டாங்க ரொம்ப சந்தோசமா.


"மிதிலவோட அப்பாதான் கேட்டாரு என்கிட்டே , "உங்க hour-ல முட்டி போட வச்சீங்களானு"", இப்படி அவங்க முடிக்கவும் எல்லாரும் என்ன ஒரே மாதிரி கொலை வெறியோட பார்த்தாங்க. அப்பவே முடிவு பண்ணிட்டேன் எனக்கு அன்னைக்கு சங்குதான்னு.

அந்த hour முடிஞ்சு அடுத்த staff வருவதற்கு இருந்த ரெண்டு நிமிஷ இடைவெளில,
நான் மாத்தி மாத்தி எல்லார்கிட்டயும் தலா 10 அடியாவது வாங்கிருப்பேன். சரி இதோடவாவது முடியும்னு பார்த்த அடுத்த அடுத்து வந்த எல்லா பாடவேளையிலும் இதே கேள்வி கேட்கப்பட, நான் அடி வாங்கிட்டே இருந்தேன்.
அடிக்கும் போது ஒருத்தி மட்டும் நல்லவளா மாறி கேட்டா பாருங்க ஒரு கேள்வி
அப்போதான் என் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தது.
" mithi உங்க அப்பா கடைசி வரை சரியான ஆளுகிட்ட இந்த கேள்விய கேட்கலையா............ பாவம்டி நீ".



Wednesday 2 June, 2010

வண்ணம் மாறிய வரங்கள்






மனிதா! என்னை தெரிகிறதா!
பயிர்களின் தேவதை நான்
என்னிடம் இருந்த அனைத்து வரங்களையும் உனக்கு விதைகளாய் அளித்துவிட்டேன்

உன் நுண்ணறிவின் நுட்பத்தை என் பயிர் பிள்ளைகளில்
கலப்படத்தை புகுத்தியா அறிய வேண்டும்
விட்டு விடு என் செல்வங்களை
வண்ணம் மாறிய என் வரங்களை காண முடியவில்லையடா

இயல்பை தொலைத்த பயிர்கள் உன் சந்ததியின் உடலை கெடுக்கும்
என்பது உன் அறிவுக்கு எட்டவில்லை போலும்
என் வரங்கள் உன் சந்ததிக்கு சாபங்களாக மாறிக்கொண்டிருகின்றன
முடிந்தால் தடுத்து கொள்

Monday 17 May, 2010

தங்க மீன்


அதிகாலை நேர கனவில் தங்க மீனொன்று என்னை எழுப்பியது
அழகிய மீன் இளவரசியை பிடிக்க முயன்றேன்

புரிய முடியாத புன் சிரிப்புடன் என் மேல் வீசிச் சென்றாள்,

பட்டாம்பூச்சி தேடல்களின் தோல்வி நேரங்களை,

கண்ணாமூச்சி ஆட்டத்தின் கடைசி நிமிடங்களை,

வைக்கோல் போரின் மேல் ஏற முயன்று தவறி விழுந்த தடயங்களை,

வெயிலின் உக்கிரம் எதிர்த்த மிதிவண்டி பயணங்களை,

தங்க மகளை புரியாமல் நோக்கிய எனக்கு சிறு புன்னகையில் புரிய வைத்தாள்

தொடர்ச்சி இல்லா நினைவுகளின் ஊடே என்னுடன்
தொடர்ச்சியாய் பயணித்த என் குழந்தை மனதை

Thursday 13 May, 2010

கண்ணாமூச்சி ஆட்டம்


கண்ணாமூச்சி ஆட்டத்தில் உன்னிடம் நான் தோற்கிறேன்
ஒவ்வொரு முறையும் உன் கண்களில் தெரியும் உன் வெற்றி புன்னகைக்காக

உனக்கு தெறிந்த ஒரே இடம் போர்வை என்பதனால் நான் அதனையே தேர்வு செய்தேன்
நீ போர்வையை தூக்கி பார்த்து கை தட்டி சிரிக்கும் அழகை ரசிப்பதற்காகவே


உன் இடம் அறிந்தும் உன்னை கண்டு பிடிக்க முடியவில்லை என்று பொய் சொன்னேன்
கண்களில் மின்னல் சிரிப்புடன் நீ வெளிவருவதை பார்த்து ரசிப்பதற்காகவே

சலித்து போனாலும் உன்னுடன் விளையாடினேன்
நீ சலிக்காமல் விளையாடுவதை பார்பதற்காகவே

Tuesday 11 May, 2010

மழை


ஹே மழையே

கருநீல மேகப் போர்வையினுள் ஒளிந்து கொண்டு வந்தாய்
"உன்னை நனைத்து காட்டுகிறேன் பார்", என்ற சவாலுடன்

என் தோழியான காற்றின் மூலம் உன்னை இங்கிருந்து விரட்டுவேன் என்றேன்- நான்

மறு நொடியே உன் நண்பன் மின்னல் கீற்றின் மூலம் மேக போர்வையை
கிழித்து கொண்டு என் மேல் உன் துளி குழந்தைகளை ஏவி விட்டாய்

நானும் உன் எதிரியான குடையின் உதவியுடன் உன்னிடம் இருந்து தப்பினேன்

இருந்தும் நீயே வென்றாய்- எப்படி என்கிறாயா?
உன் குழந்தைகள் தங்களின் அழகால் என் மனதை அல்லவா நனைத்து விட்டனர்

Saturday 8 May, 2010

சமர்ப்பணம்


நான் இது வரை எனது எந்த படைப்பை இந்த வலைபூவில்(blog) பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் மிகவும் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்வேன். ஆனால் முதன் முறையாக கண்களில் கண்ணீரோடும், உள்ளத்தில் வலியோடும் இதனை பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எனது கவிதைகளை எனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் ஒரு நாள் எனது தோழி ஒரு வலைப்பூவின் முகவரி தந்து அதனை பார்க்க சொன்னாள். அதனுள் எனது கவிதைகள் இருந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். "யார் இதனை உருவாக்கியது?", என்றேன். " எனது நண்பன் விஜயன் உனது கவிதைகளை வாசித்து விட்டு இதனை உருவாகினார். உனது படைப்புக்களை இனிமேல் இந்த மாதிரியான வலைபூவின் மூலம் வெளியிடு" என்றாள். அதன் பின் தான் எனக்கு விஜயனின் அறிமுகம் கிடைத்தது.

நானும் எனக்கென இந்த வலைபூவினை உருவாக்கி அதனை விஜயனுக்கு அனுப்பி வைத்தேன். "உனக்கு நிறைய திறமை உள்ளது அதை நீ விட்டு விடாதே", என்று அடிக்கடி கூறுவார்.

அது மட்டும் இன்றி "தினமும் உனக்கொரு தலைப்பு தருவேன் அதற்கு நீ கவிதை எழுத வேண்டும்", என்றார். தினமும் ஒரு தலைப்பும் தர ஆரம்பித்தார். இந்த வலைப்பூவில் எனது படைப்புகளை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த பின்னர் தான் என்னால் இவளவு எழுத முடியும் என்று எனக்கே புரிந்தது. எனது அலுவலக நண்பர்களிடம் இருந்தும், கல்லூரி நண்பர்களிடம் இருந்தும் எனக்கு பாராட்டுகள் கிடைக்க ஆரம்பித்தது.

என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை நான் விஜயனை நேரில் பார்த்து பேசிய ஒரே வார்த்தை "நன்றி" என்றது மட்டும்தான். மற்றபடி இருவரும் இணையதளத்திலேதான் பேசி கொண்டோம். "நான் உன்னை நேரில் பார்த்து பேசியதில்லை, உன்னுடன் பேச வேண்டும் என்று ஏப்ரல் 29-ம் தேதிதான் எனது கைபேசியின் எண்ணை வாங்கி கொண்டார்.

மே 3-ம் தேதி அலுவலகம் வந்த எனக்கு அந்த மின்னஞ்சல் பேரிடியாய் இறங்கியது . "நமது அலுவலக நண்பர் விஜயன் ஒன்றாம் தேதி நடந்த விபத்தில் மரணமடைந்தார்" என்பதுதான் அந்த செய்தி.

சிறிது நாட்களிலே இறந்து விடுவார் என்று தெரிந்தும், அவரை எனக்கு நல்ல நண்பனாக்கிய இறைவனை கடிந்து கொண்டேன்.

இன்றும் விஜயன் இவ்வுலகில் இல்லை என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவருக்காக அவர் தந்த தலைப்புகளில் கவிதை எழுதி அவருக்கே சமர்பிக்கிறேன்.

நேசம்

புல்லின் மேல் இருந்த சிறு பனித்துளியை நேசித்தேன் பக்கத்து வீட்டின் நான்கு வயது சிறுமி தன் பிஞ்சு விரல்களால் போட்ட தாமரை கோலத்தை நேசித்தேன் பத்து மாத குழந்தையின் தொடுகையை நேசித்தேன் ஓசை இல்லா இரவுகளில் கேட்கும் கடிகார சப்தத்தை நேசித்தேன் இவை எல்லாம் நிலை இல்லை என்றாலும் நேசித்தேன் நேசத்தின் நினைவுகளாய் இவை நிலைத்து நிற்கும் என்பதனால்


புல்லின் மேல் இருந்த சிறு பனித்துளியை நேசித்தேன்

பக்கத்து வீட்டின் நான்கு வயது சிறுமி
தன் பிஞ்சு விரல்களால் போட்ட தாமரை கோலத்தை நேசித்தேன்

பத்து மாத குழந்தையின் தொடுகையை நேசித்தேன்

ஓசை இல்லா இரவுகளில் கேட்கும்
கடிகார சப்தத்தை நேசித்தேன்

இவை எல்லாம் நிலை இல்லை என்றாலும் நேசித்தேன்
நேசத்தின் நினைவுகளாய் இவை நிலைத்து நிற்கும் என்பதனால்
____________________________________________________________________

இந்த கவிதையினை அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது தெரிந்ததால் எனது வலைபூவில் போடாமல் அவருக்கு மட்டும் அனுப்பி வைத்தேன்.

திருமணம்.

ஆயிரம் அர்த்தங்களை மறைத்து வைத்திருக்கும் அவளின் சிறு முறுவல்
அணிந்திருக்கும் நகைகளை விட மின்னும் அவள் கண்கள்

அக்னியின் முன் அமர்ந்து வியர்வையில் நனைந்திருந்தும்
அவள் கண்களுக்கு அழகாய் தெரியும் அவன்

பலூன் கேட்டு அழுகும் பட்டு பாவாடை சிறுமிகள்
வாங்கி வந்த பலூனை உடைத்துவிட்டு கைதட்டும் சிறுவர்கள்

அழகிய கன்னியர்களை பார்த்ததும்
"இவள் தங்கை முறையாக இருக்க கூடாது" என்று வேண்டும் இளவட்டங்கள்

சிறு பதற்றத்துடனே திரியும் மணப்பெண்ணின் பெற்றோர்

கிண்டல் பேச்சுக்ளுடன் மேடையில் நிற்கும் மணப்பெண்ணின் தோழியர்கள்
அவர்களை கண்களால் படமெடுக்கும் மணமகனின் தோழர்கள்

இத்தனை இன்பங்களையும் ஒரு சேர காண முடிந்த உலகின் ஒரே நிகழ்வு- இந்திய திருமணம்.

____________________________________________________________________

பூ

நண்பா
சில நாள் வாழ்கையில் அனைவர்க்கும் இன்பம் தரும் மலரினை போல
விரைவில் எங்களை விட்டு சென்றாலும்
மலரின் மனம் போல் உன் நினைவும் உன் நட்பும்
எங்களின் காலம் முழுவதும் மறக்க முடியாத பொக்கிஷங்கள்

____________________________________________________________________

வலைபூ

நான் ஈன்றேடுத்த படைப்புக்களை அறிமுகபடுத்த உன்னால்
அறிமுகபடுதபட்ட என் உயிர் தோழி இந்த வலைபூ.
நீ தரும் தலைப்புகளில் கவிதைகளை நீ வாசிக்க முடியாவிட்டாலும்
நீ இந்த கவிதைகளில் என்றும் வாழ்கிறாய் என்ற
ஒற்றை நிம்மதியுடன் இதனை உனக்கே சமர்பிக்கிறேன்

Tuesday 4 May, 2010

உன் முதல் ரசிகை


முதன் முதலில் வகுப்பறைக்குள் நுழைந்த என்னை
தாய்மையுடன் எதிர் கொண்ட உனது புன்னகை முகம்

பள்ளிக்கு வர அடம்பிடித்து உன் மேல் புத்தக பையை தூக்கி எறிந்த மாணவியின்
அழுகையை வாஞ்சையுடன் அணைத்து நிறுத்திய உனது பொறுமை

என் கை பிடித்து எழுத கற்றுக்கொடுத்த போது
உன் அருகாமையால் கிடைத்த உன் வாசனை

கையில் பிரம்புடன் தூங்கு என்று என்னை மிரட்டிய போதும்
உன் கண்களில் நான் கண்ட கனிவு

என்னோடு சேர்ந்து மைதானத்தில் குழந்தையாய்
மாறி நீ ஓடிபிடித்து விளையாடிய தருணங்கள்

சாப்பிட அடம் பிடித்த என் சக மாணவிக்கு நீ ஊட்டி விட்ட போது
அவள் மேல் பொறாமை கொண்ட நிமிடங்கள்

உன் புடவை தலைப்பை பிடித்து இழுத்து "நான் எழுதிட்டேன்" என்று எனது எழுதுபலகையை காட்டிய போது "சமத்து" என்று நீ கன்னத்தை கிள்ளியதால் ஏற்பட்ட லேசான வலி ---------------------------------------------------------------------

என்றோ ஒரு நாள் கூட்டத்தில் உன் சாயலில் பெண்மணியை கண்டு, அது நீ இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் "இந்த அத்தனை நினைவுகளையும் எடுத்து கொண்டு என்னுள் இருந்து வந்த நான்கு வயது சிறுமி".

Thursday 22 April, 2010

காதல்


காதல் இந்த வார்த்தையக் கேட்டாலே ஏதோ தப்பான ஒன்ணுன்னு நினைக்கறாங்க நம்ம சமூகத்துல. உண்மைல காதல்னா என்னங்க, உண்மையான அன்பு. அது என்னவோ எல்லாரும் காதல்னா கல்யாணமாகத பொண்ணும், பையனும் வீட்டுக்கு தெரியாம செய்யற தப்பான ஒரு விஷயம்னு தான் நினைக்கறாங்க.

ஏன்? எழுபது வயசுக்கு மேல நம்ம தாத்தா, பாட்டி ரெண்டு பேர்க்கு இடையே இருக்கற பாசமும், அக்கறையும் காதல் தானே.

நான் கூட காதல்னா தப்பான ஒன்ணுன்னு தான் நினைச்சு கிட்டு இருந்தேன், ஆனா உண்மையான காதல்னா என்னனு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் புரிஞ்சுக்கிட்டேன்.

அது february 14. எல்லாருக்கும் தெரியும் அன்னைக்கு காதலர் தினம்னு. அன்னைக்கு எங்க வீட்டில எல்லாருக்கும் நாள் எப்பவும் போலதான் போய்ட்டு இருந்தது.
நான் college-கு போய்ட்டு வந்து எப்பவும் போல படிக்காம TV பார்த்துட்டு இருந்தேன். என்னை தவிர எல்லாரும் அவங்க வேலைய சரியாதான் பார்த்துக்கிட்டு இருந்தாங்கனு வச்சுக்குவோம். வெளில போய்ட்டு வந்த அப்பா கைல பார்த்த ஏதோ gift box மாதிரி இருந்தது .

"என்னப்பா இன்னைக்கு lovers day யாராவது propose பண்ணிட்டாங்களா உங்களை"-அப்படினு என் தம்பி கிண்டலா கேட்டு எங்க அப்பா வயித்துல குத்தினான்

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"-அவன சும்மா இருன்னு சைகைல சொல்லிட்டு சமையல் அறைக்குள்ள மெதுவா போன எங்க அப்பா, அம்மாகிட்ட அந்த கிப்ட கொடுத்துட்டு விட்டாரு பாருங்க ஒரு லுக்கு, என்ன ஒரு romantic look தெரியுமா அது.

"என்னது இது"-எதுவுமே தெரியாத ஆளு மாதிரி அம்மா கேட்க

"இன்னைக்கு காதலர் தினம், அதான் கிப்ட் வாங்கிட்டு வந்துருக்கேன்", அப்படினு அசடு வழிஞ்சார் அப்பா.

"என்னது காதலர் தினமா, பரிசா அது சரி பிள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி குதிச்ச கதையா இல்ல இருக்கு"-அப்படினு அம்மா dialog விட

"அம்மா அம்மா please வாங்கிக்கோங்கம்மா", "அப்பா ஆசையா வாங்கிட்டு வந்திருக்கார்ல"
இப்படி நானும் ,அக்காவும் மாத்தி மாதி sound விட அம்மா வாங்கிகிட்டாங்க.

"இதெல்லாம் என்னங்க... இப்போதான் வயசு திரும்புதா என்ன?", அம்மா வாய் சொன்னாலும்
கண் அந்த gift-a அவ்ளோ ஆசையா பார்த்துச்சு. அம்மா முகத்துல எப்பவும் இல்லாத ஒரு வித பொலிவை அன்னைக்கு பார்த்தேன்.

"அம்மா அத திறந்து பாருங்கம்மா, அப்பாவோட selection எப்படி இருக்குனு பார்க்கலாம்", என் தம்பி அவசரப்படுத்த.

அம்மா பொறுமையா, முகத்துல புன் சிரிப்போட அந்த gift-a வெளில எடுத்தாங்க.

முக்கோண வடிவ கண்ணாடி பெட்டிக்கு நடுவுல உள்ள ஒரு சிகப்பு வண்ண velvet மேடைல அழகா 5 ரோஜா, ஒவ்வொன்னும் ஒவ்வொறு sizela அழகா இருந்தது.

"ஹையோ ரொம்ப அழகா இருக்கு", "selection super-pa" இப்படி மாறி மாறி நாங்க புகழ்ந்து தள்ள

"ஏய் அதுக்குள்ள பாரு 5 ரோஜா இருக்கு, அது நாமதான். அந்த பெரிய ரோஜா அப்பா, அதுக்கு பக்கத்துல அடுத்த size-ல இருக்கே அது அம்மா, அடுத்த மூணு குட்டி ரோஜாவும் நம்ம 3 பேரு. அப்பா எவ்ளோ correct-a வாங்கிட்டு வந்திருக்காரு பாரு", அப்படினு அக்கா அத பார்த்து விளக்கம் தர நானும், தம்பியும் "ஹோ" னு கதினோம்.

நாங்க அதை கொண்டு போய் வீட்டு வரவேற்பு அறைல எங்க வைக்கலாம்னு சண்டை போட்டுட்டு இருக்கும் போது அம்மாவும், அப்பாவும் விட்டுக்கிட்டாங்க பாருங்க ஒரு look, அதுல ஆயிரம் அர்த்தங்கள் தெரிஞ்சது எனக்கு.

58 வயசுலயும் அப்பா கண்ல தெரிஞ்ச காதல், காதோரமா நறச்ச முடியோட இருந்தும் வெக்கதுல ரொம்ப அழகா தெரிஞ்ச அம்மா........, சே அந்த நிமிஷத்த என் வாழ்க்கை முழுக்க மறக்க முடியாதுங்க.

அன்னைக்கு முழுக்க அம்மா ஒரு புன்சிரிப்போடாவே தான் வலம் வந்தாங்க. அதுதான் அப்பா அம்மாவுக்கு வாங்கி கொடுத்த முதல் காதலர் தின பரிசு.

அதுக்கு அப்பறம் யோசிச்சு பார்த்தப்பதான் புரிஞ்சது இதுக்கு பேர்தான் உண்மையான
காதல்னு. அப்பா கொஞ்ச நேரம் தாமதமா வந்தாலும் அம்மா வீட்டுக்கும் வாசலுக்கும் நிமிசத்துக்கு ஒரு தடவை நடக்கறது........
அம்மா ஊருக்கு போன அப்பா phone செஞ்சு "எப்போ வர நீ இந்த பிசாசுங்க தொல்லை தாங்க முடியல", அப்படினு எங்களை சாக்கா வச்சுக்கிட்டு அம்மாவ வேகமா வர சொல்றது.............
இதுல எல்லாமே காதல் இருக்கறது புரிஞ்சது........

ஆமாங்க வீட்டுக்கு தெரியாம 20 வயசு பசங்க சந்திச்சு பேசிக்கறதும், காதலர் தினத்துக்கு அவங்க பரிசு பரிமாறிக்கிறதும், பெத்தவங்களே வேணாம்னு சொல்லிட்டு விரும்பினவங்களை கல்யாணம் பண்ணிகிறதுக்கும் பேர் காதல் இல்ல, எத்தனை வயசு ஆனாலும் அதே அன்பு மாறாம, அக்கறையோட இருக்கறது தான் உண்மயான காதல்.

காதல் கல்யாணம் பண்றவங்க கிட்ட மட்டும் தான் காதல் இருக்குன்னு இல்லைங்க,
அந்த காலத்துல கல்யாணத்து அன்னைக்கு தான் கட்டிக்க போறவங்க முகத்தையே பார்த்து இருப்பாங்க, அவங்க கிட்டயும் உண்மையான காதல் இருந்தது.

காதலுக்கான அர்த்தம் எனக்கு 20 வயசுலதான் புரிஞ்சது உங்களுக்கு?

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle