Thursday, 14 October 2010

பழமொழிகளும், புரிதலும்






                   பழமொழிகள் - பொதுவா யாரையாவது கிண்டல் பண்றதுக்கோ, இல்லனா காலணா  செலவு இல்லாம அறிவுரை சொல்றதுக்கோ பயன்படுத்தப்படுகிற ஒரு வரி வாக்கியங்கள். இன்னைக்கு நம்மால் சொல்லப்படுகிற பழமொழிகளோட உண்மையான அர்த்தம் நம்ம பேச்சுவழக்கு காரணமா நிறைய மாற்றப்பட்டிருக்கு.


எனக்கு தெரிஞ்ச ஒரு சில பழமொழிகளோட நடைமுறை பயன்பாட்டையும், அதன் உண்மையான அர்த்தங்களும் இந்த பதிவுல போடலாம்னு இருக்கேன்.


1) அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்.


தற்போதைய பயன்பாடு: கூடப் பொறந்த பிறப்புங்க சொல்லி கூட திருந்தாத பயலுங்க, நாலு அடி அடிச்சா தானா திருந்துவாய்ங்க.



உண்மையான அர்த்தம்: அடி என்பது கடவுளின் திருவடி. நமக்கு துன்பம் வரும் போது நம்முடைய இரத்த சொந்தங்கள் கூட உதவாமல் போகலாம். ஆனால், இறைவனின் திருவடியை சரணடைந்தால், நமக்கு கட்டாயம் நல்வழி கிட்டும்.




2)ஆறிலும் சாவு , நூறிலும் சாவு.


தற்போதய பயன்பாடு: ஒரு மனிதனுக்கு சாவுங்கறது ஆறு வயசுலயும் ஏற்படலாம், நூறு வயசுலயும் ஏறபடலாம். அதனால எல்லாத்துக்கும் ரெடியா இருங்கப்பா.


உண்மையான அர்த்தம்: மகாபாரதம் காவியத்தில் கொடைவள்ளல் கர்ணன் பிறப்பால் பஞ்ச பாண்டவர்களின் சகோதரன். ஆனால் அவனுடைய சிநேகத்தால் துரியோதனனின் பக்கம் நின்றான். குந்தி தேவி வந்து குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் பக்கம் நிற்க சொன்ன போது , தனது அன்னையிடம் ,"ஆறிலும் சாவு, நூறிலும் சாவு", என்றான் .
அதாவது, நான் பாண்டவர்களுக்கு துணையாய் ஐந்தோடு , ஆறாவது ஆளாய் நின்று போரிட்டாலும், எனக்கு மரணம் உறுதி. கௌரவர்கள் நூறு பேருக்கு கீழ் நின்று போரிட்டாலும் மரணம் என்பது உறுதி. நான் என் நண்பன் துரியோதனன் செய்த செய்நன்றி மறவாமல் இருக்க அதர்மம் பக்கம் நின்று போரிட தயாராக உள்ளேன் என்றான்.


எந்த காரணத்தை கொண்டும் செய்நன்றி மறவாதிருக்கு வேண்டும் என்பதற்கு இந்த பழமொழி ஒரு உதாரணம்.


3)சட்டியில் இருக்கறது அகப்பையில் வரும்


தற்போதய பயன்பாடு: நம்ம கைல எவ்ளோ பணமோ, பொருளோ இருக்கோ அந்த அளவுக்குதான் பிறருக்கு உதவி பண்ண முடியும் , இப்படியும் சிலர் சொல்வாங்க.
நம்மகிட்டா எவ்வளவு அறிவும், திறமையும் இருக்கோ , அவ்வளவு பலன் தான் கிடைக்கும் , இப்படியும் சிலர் சொல்வாங்க.
உண்மையான அர்த்தம்: இந்த பழமொழி நமது பேச்சு வழக்கால் முற்றிலும் மற்றம் அடைந்துள்ளது. "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"
திருமணம் ஆகி நீண்ட நாள் ஆகியும் குழந்தை பேரு இல்லாத பெண்கள், சஷ்டியில் இறைவனை வேண்டி விரதம் இருந்தால், அவர்களின் அகப்பையில்
அதாவது கருப்பையில் குழந்தை உண்டாகும். நமது பேச்சு வழக்கால் 'சஷ்டி' என்பது 'சட்டி' என்றானது.


4)ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்.


தற்போதய பயன்பாடு: மூல நட்சதிரதுல ஆண் பிள்ளை பிறந்தால் அவன் அரசன் போல வாழ்வான், அதே நட்சதிரதுல பெண் பிள்ளை பிறந்தால் அவள் வாழ்கை நிர்மூலம் (நன்றாக இருக்காது)


உண்மையான அர்த்தம்: இந்த பழமொழியும் பேச்சு வழக்காலும் , மனிதர்களின் வஞ்சக நாவினாலும் மாற்றப்பட்டுள்ளது
"ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மலம்".
நிர்மலம் என்ற சொல் காலபோக்கில் நிர்மூலம் என்று மாற்றம் அடைந்ததினால
இன்னைக்கு ஜாதகத்தை ரொம்ப நம்புற பெரியவங்க,


" மூல நட்சதிரதுல பொறந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வந்தால் நல்லதில்லை"
இப்படின்னு சொல்லி நிறைய பெண்களோட வாழ்கையை கேள்விகுறி ஆக்கிட்டு இருக்காங்க
உங்க அம்மா அப்பாவும் இப்படி நினைச்சா இத போய் அவங்க கிட்ட சொல்லி புரிய வைங்க நண்பர்களே.


5)இலை மறைவு காய் மறைவு


இதற்கு இப்போதைய பயன்பாடு சரியா தவறான்னு தெரியாது, ஆனா இந்த பழமொழியை வச்சு, நான் கேட்ட சுவாரஸ்யமான கதையை சொல்றேன்


இங்க நிறைய பெண்களுக்கு கணவன் சாப்பிட்ட எச்சில் இலையிலோ, இல்லனா எச்சில் தட்டிலோ சாப்பிடறதுங்கறது ஆணாதிக்க உணர்வின் காரணமா உண்டான வழக்கம், அப்படிங்கற எண்ணம் இருக்கலாம். இதற்கு பின்னாடி இருக்கற உண்மையான அன்பின் வெளிப்பாடு பற்றி நம்மல்ல பலருக்கு தெரியாது.


நம்ம தாத்தா, பாட்டி காலத்துல எல்லாம் தினமும் வாழை இலையில் சாபிடற வழக்கம் இருந்தது. வீட்டுல இருக்கற பெண்கள் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறிட்டு கடைசில சாபிடறதை வழக்கமா வச்சுருப்பாங்க. சில சமயங்கள்ல ஒரு சில பதார்த்தங்கள் பத்தாம போகலாம். அப்போலாம்  கணவன் சாப்பிடும் போது தன்னோட மனைவிக்கு பிடிச்ச உணவு வகைகள் இருந்தா அதை அப்பளம் அடியிலோ இல்லனா அப்படியேவோ மிச்சம் வைப்பாங்க, அடுத்ததா அதே இலைல சாபிடற மனைவிக்காக.


         கணவன் சாப்பிட்ட தட்டுலையோ, இல்ல இலையிலோ மனைவியும் சாப்பிடறதுங்கறது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு இல்ல உண்மையான காதலின் வெளிப்படா அன்னைக்கு இருந்தது. கூட்டு குடும்பத்துல இருந்த அவங்களால் தங்களோட அன்பை இப்படி சின்ன சின்ன விஷயங்களால்தான் வெளிபடுத்த முடிஞ்சது. இந்த காலத்தில அன்பை வெளிபடுத்த நிறைய நேரமும் தனிமையும் இருந்தும் நிறைய தம்பதிகள் விவாகரத்து வரைக்கும் போறாங்க. மனசு விட்டு பேசனும்னு இல்லையே, சின்ன சின்ன அக்கறையிலும் , பார்வையிலுமே அன்பை வெளிபடுத்த முடியுமே. இதை புரிசுகிட்டா விவகரதுங்கறது இல்லாமலே போகலாம்.

6 comments:

  1. ஒவ்வொரு பழமொழிக்கும் தங்களது விளக்கம் தெளிவாகவும் சாலச்சிறந்ததாகவும்
    நமது பண்பாட்டினை ஒட்டிய வாறும் அமைந்துள்ளது.
    குறிப்பாக, அடி உதவுவது போல் , அண்ணன் தம்பி உறவு உதவாது என்பதற்கு நீங்கள் சொன்ன‌
    விளக்கம் கேட்டு மெய் சிலிர்த்துப்போனேன்.
    பழ மொழி புது மொழியானது சிறப்புடைத்து.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  2. அருமையான பதிவு, மிதிலா. குறிப்பாக, சுப்பு தாத்தா சொன்னது போல் முதல் பழமொழியின் பொருள் மனதைத் தொட்டது.

    ReplyDelete
  3. மிக்க நன்றி கவிநயா.
    நன்றி திரு. சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. Very good info mithi .... These must be known to everyone to tell to the next generation.

    ReplyDelete
  5. Interesting!!! i think similarly there are many reasons behind some of superstitions which makes sense...like why you shudn't cut your nails at night etc.. see if you can post them too

    And your writing style is good..keep it up.

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள் ,இதையும் சேர்த்துக்குங்க..

    ஊரன் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ,
    தன் பிள்ளை தானே வளரும் .

    நடைமுறை விளக்கம் :

    நாம் ஊருக்காக உழைத்தால்(தான தர்மங்கள் செய்தல்),பின்னால் கஷ்டங்கள் வந்தாலும் செய்த புண்ணியங்களின் பலனாக தன் பிள்ளைகள் கஷ்டபடாமல் வளருவார்கள் .
    உண்மையான விளக்கம் :

    தன் வீட்டிற்கு வரும் மனைவியை (ஊரன் பிள்ளை) நன்றாக கவனித்து வளர்த்தோமானால் அவள் வயிற்றில் வளரும் குழந்தை(தன் பிள்ளை) தானாக ,நன்றாக வளரும் என்பதே பொருள் .

    ReplyDelete