Saturday, 8 May 2010

சமர்ப்பணம்


நான் இது வரை எனது எந்த படைப்பை இந்த வலைபூவில்(blog) பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் மிகவும் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்வேன். ஆனால் முதன் முறையாக கண்களில் கண்ணீரோடும், உள்ளத்தில் வலியோடும் இதனை பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எனது கவிதைகளை எனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருந்தேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் ஒரு நாள் எனது தோழி ஒரு வலைப்பூவின் முகவரி தந்து அதனை பார்க்க சொன்னாள். அதனுள் எனது கவிதைகள் இருந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். "யார் இதனை உருவாக்கியது?", என்றேன். " எனது நண்பன் விஜயன் உனது கவிதைகளை வாசித்து விட்டு இதனை உருவாகினார். உனது படைப்புக்களை இனிமேல் இந்த மாதிரியான வலைபூவின் மூலம் வெளியிடு" என்றாள். அதன் பின் தான் எனக்கு விஜயனின் அறிமுகம் கிடைத்தது.

நானும் எனக்கென இந்த வலைபூவினை உருவாக்கி அதனை விஜயனுக்கு அனுப்பி வைத்தேன். "உனக்கு நிறைய திறமை உள்ளது அதை நீ விட்டு விடாதே", என்று அடிக்கடி கூறுவார்.

அது மட்டும் இன்றி "தினமும் உனக்கொரு தலைப்பு தருவேன் அதற்கு நீ கவிதை எழுத வேண்டும்", என்றார். தினமும் ஒரு தலைப்பும் தர ஆரம்பித்தார். இந்த வலைப்பூவில் எனது படைப்புகளை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த பின்னர் தான் என்னால் இவளவு எழுத முடியும் என்று எனக்கே புரிந்தது. எனது அலுவலக நண்பர்களிடம் இருந்தும், கல்லூரி நண்பர்களிடம் இருந்தும் எனக்கு பாராட்டுகள் கிடைக்க ஆரம்பித்தது.

என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை நான் விஜயனை நேரில் பார்த்து பேசிய ஒரே வார்த்தை "நன்றி" என்றது மட்டும்தான். மற்றபடி இருவரும் இணையதளத்திலேதான் பேசி கொண்டோம். "நான் உன்னை நேரில் பார்த்து பேசியதில்லை, உன்னுடன் பேச வேண்டும் என்று ஏப்ரல் 29-ம் தேதிதான் எனது கைபேசியின் எண்ணை வாங்கி கொண்டார்.

மே 3-ம் தேதி அலுவலகம் வந்த எனக்கு அந்த மின்னஞ்சல் பேரிடியாய் இறங்கியது . "நமது அலுவலக நண்பர் விஜயன் ஒன்றாம் தேதி நடந்த விபத்தில் மரணமடைந்தார்" என்பதுதான் அந்த செய்தி.

சிறிது நாட்களிலே இறந்து விடுவார் என்று தெரிந்தும், அவரை எனக்கு நல்ல நண்பனாக்கிய இறைவனை கடிந்து கொண்டேன்.

இன்றும் விஜயன் இவ்வுலகில் இல்லை என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவருக்காக அவர் தந்த தலைப்புகளில் கவிதை எழுதி அவருக்கே சமர்பிக்கிறேன்.

நேசம்

புல்லின் மேல் இருந்த சிறு பனித்துளியை நேசித்தேன் பக்கத்து வீட்டின் நான்கு வயது சிறுமி தன் பிஞ்சு விரல்களால் போட்ட தாமரை கோலத்தை நேசித்தேன் பத்து மாத குழந்தையின் தொடுகையை நேசித்தேன் ஓசை இல்லா இரவுகளில் கேட்கும் கடிகார சப்தத்தை நேசித்தேன் இவை எல்லாம் நிலை இல்லை என்றாலும் நேசித்தேன் நேசத்தின் நினைவுகளாய் இவை நிலைத்து நிற்கும் என்பதனால்


புல்லின் மேல் இருந்த சிறு பனித்துளியை நேசித்தேன்

பக்கத்து வீட்டின் நான்கு வயது சிறுமி
தன் பிஞ்சு விரல்களால் போட்ட தாமரை கோலத்தை நேசித்தேன்

பத்து மாத குழந்தையின் தொடுகையை நேசித்தேன்

ஓசை இல்லா இரவுகளில் கேட்கும்
கடிகார சப்தத்தை நேசித்தேன்

இவை எல்லாம் நிலை இல்லை என்றாலும் நேசித்தேன்
நேசத்தின் நினைவுகளாய் இவை நிலைத்து நிற்கும் என்பதனால்
____________________________________________________________________

இந்த கவிதையினை அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது தெரிந்ததால் எனது வலைபூவில் போடாமல் அவருக்கு மட்டும் அனுப்பி வைத்தேன்.

திருமணம்.

ஆயிரம் அர்த்தங்களை மறைத்து வைத்திருக்கும் அவளின் சிறு முறுவல்
அணிந்திருக்கும் நகைகளை விட மின்னும் அவள் கண்கள்

அக்னியின் முன் அமர்ந்து வியர்வையில் நனைந்திருந்தும்
அவள் கண்களுக்கு அழகாய் தெரியும் அவன்

பலூன் கேட்டு அழுகும் பட்டு பாவாடை சிறுமிகள்
வாங்கி வந்த பலூனை உடைத்துவிட்டு கைதட்டும் சிறுவர்கள்

அழகிய கன்னியர்களை பார்த்ததும்
"இவள் தங்கை முறையாக இருக்க கூடாது" என்று வேண்டும் இளவட்டங்கள்

சிறு பதற்றத்துடனே திரியும் மணப்பெண்ணின் பெற்றோர்

கிண்டல் பேச்சுக்ளுடன் மேடையில் நிற்கும் மணப்பெண்ணின் தோழியர்கள்
அவர்களை கண்களால் படமெடுக்கும் மணமகனின் தோழர்கள்

இத்தனை இன்பங்களையும் ஒரு சேர காண முடிந்த உலகின் ஒரே நிகழ்வு- இந்திய திருமணம்.

____________________________________________________________________

பூ

நண்பா
சில நாள் வாழ்கையில் அனைவர்க்கும் இன்பம் தரும் மலரினை போல
விரைவில் எங்களை விட்டு சென்றாலும்
மலரின் மனம் போல் உன் நினைவும் உன் நட்பும்
எங்களின் காலம் முழுவதும் மறக்க முடியாத பொக்கிஷங்கள்

____________________________________________________________________

வலைபூ

நான் ஈன்றேடுத்த படைப்புக்களை அறிமுகபடுத்த உன்னால்
அறிமுகபடுதபட்ட என் உயிர் தோழி இந்த வலைபூ.
நீ தரும் தலைப்புகளில் கவிதைகளை நீ வாசிக்க முடியாவிட்டாலும்
நீ இந்த கவிதைகளில் என்றும் வாழ்கிறாய் என்ற
ஒற்றை நிம்மதியுடன் இதனை உனக்கே சமர்பிக்கிறேன்

2 comments:

  1. என் நினைவில் இருந்தவனை
    வலைபதிவில் பொறித்தாய் சிலையாய்

    ReplyDelete
  2. ஆண்டவன் இப்படித்தான் நமக்கு நல்லவர்களை அறிமுகம் செய்துவிட்டு பிறகு நம்மிடம் இருந்து அவர்களை பிரித்து விடுவான் , நான் பார்த்திராத முகமாக இருந்தாலும் இந்த முகமறியா நல்ல மனிதருக்கு என் தலைபணிந்த வணக்கங்கள்.மிதிலா இவர்தானே அவர் ஊர் பேருந்து நிலையத்துல(கிருஷ்ணகிரி அருகில் ) இறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னாடி விபத்தில் சிக்கியவர் ?

    ReplyDelete