Thursday, 29 July 2010

மன்னித்து விடு



என் வகுப்பு தோழனே,

கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,

என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,

என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,

தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,

வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,

என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,

நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,

பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,

எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,

சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,

'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,

எப்படி சொல்வது உன்னிடம்?

எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,

உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,

என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,

எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,

எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,

என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,

வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?

பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?

உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்

எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?

என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது

மன்னித்து விடு என்னை?

Tuesday, 20 July 2010

நம் நட்பு




சரியென்று சொல்ல முடியவில்லை,
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

வார்த்தைகள் பரிமாற்றம் எண்ணங்களின் பரிமாற்றமாய்
உரு மாறிய பின் உணர்ந்தேன் நமது நெருங்கிய நட்பை

மணித்துளிகள் கரைவது அறியாமல் பேசிய வார்த்தைகளில்
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

பிரிந்து விடும் என்று தெரிந்தும் உருவாக்கிய நட்பை
சரியென்று சொல்ல முடியவில்லை,
தவறொன்றும் இருந்து விடவில்லை,
இருந்தும் ஏதோ உறுத்தல்

இறுதியில்  உணர்ந்தேன் அந்த உறுத்தல்
நம்மை கடந்து சென்றவர்களின் பார்வையினால் வந்தது என்று

Tuesday, 13 July 2010

அழகிய சிறை



எத்தனை முறை பார்த்தாலும் என் கண்ணாடி என்னை
அழகாய் காட்டவில்லையடா உன் கருவிழி போல.

உன் கருவிழிக்குள் சிக்கித் தவிக்கும்
என் சுந்தர வதனத்தை காணவே தினம் உன் விழி நோக்குகிறேன்

அப்படி என்ன அதிசயமான பாதரசம் பூசி உள்ளாய்
உன் விழிச் சிறைக்கு

எத்தனை முறை நீ விடுவித்தாலும் தானாக வந்து அடைப்பட்டு
கொள்கிறேன் அந்த அழகிய சிறைக்குள்

Wednesday, 7 July 2010

பௌர்ணமி நிலவே




என் வளர்பிறை நிலவே
இலக்கணம் பார்க்கவில்லை உன் மனதின் மழலை பேச்சிற்கு

உனை பார்க்க துடிக்கிறேன்
என் நாடித்துடிப்பை நானே எண்ணி பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து

மயக்கமும் , சோர்வும் தான் என்றாலும் பொறுத்து கொண்டேன்
அது உன்னால் ஏற்பட்டது என்பதனால்

எத்தனை முறை ஒவ்வாமை ஏற்பட்டாலும் உண்ண மறுக்கவில்லை,
உன் சிறு உடல் தழைப்பதற்காக

இன்னிசைக்கே அடிமை ஆகாத என் மனம்
உன் அதிவேக இதய துடிப்பை மட்டும் மண்டியிட்டு கேட்கிறது

உன் அழகை கண்டு பெருமைப்பபட்டு கொண்டேன் - உனை
அதிநவீன அறிவியல் சாதன உதவியுடன் அரை குறையாய் பார்த்த பொழுதுகளில்

பல இரவுகளில் தூக்கம் தவிர்த்தேன் - நீ
தூக்கம் இன்றி எனை உதைத்து விளையாடுவதை ரசிப்பபதற்காக

மௌன விரதம் இருந்தேன் என் வளர்பிறை வயிற்றினுள்
நீ அசைவற்று உறங்கிய நேரங்களில் எல்லாம்

தவம் இருக்கிறேன் என் நிலவு தன் முழு உருவம்
காட்ட போகும் அந்த பௌர்ணமி நாளுக்காக

Friday, 2 July 2010

யுத்த பூமி



அவர்களின் கண்களில் பொங்கிய பகைமை
கானல் நீரினால் பொங்கிய வெள்ளம் என்பதை உணர மறுப்பதேன்?

முதன் முதலில் பார்த்து கொண்டாலும்
அவர்கள் பகைவர்கள் தானாம்

நான்கடி தொலைவில் நின்றாலும் அவர்களின்
தேசங்கள் வேறாகி போன வினோதமென்ன?

என்று ஆரம்பமானது இந்த பகைமை?
ஆதாம், ஏவாலின் சந்ததிகள் வளர ஆரம்பித்ததில் இருந்தோ?

அவர்களின் ஆயுதங்கள் எதிரே உள்ளவனின்
இரத்தத்தின் நிறத்தை அறியும் ஆவலில் முன் வந்து நிற்கிறதோ?

உடைகளின் நிறங்களில்தான் அவர்களுக்குள் வேற்றுமை
கொலை வெறி கொண்ட கண்களிலோ, அவை பார்க்கும் குறியிலோ அல்ல

இத்தனை பகைமை கொண்ட இவர்கள் யார் தெரியுமா?
ஏதோ இரு நாடுகளின் எல்லை காவலர்கள்!